Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்கு தமிழகத்தில் இன்று முதல் தடா! வணிகர்கள் அதிரடி

நம் மண்ணில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பிரச்னையைத் தீர்க்காமல், இங்கு எதையும் சரிசெய்ய முடியாது என்று உணர்ந்த நம் இளைஞர் பட்டாளம், ஜல்லிக்கட்டுத் தடைக்குப் பின்னால், நசுக்கப்பட்ட நம்மூர் உணவு உற்பத்தி அரசியலைக் கையிலெடுத்து, 'வெளிநாட்டுக் குளிர்பானங்களை
இனிப் பயன்படுத்த மாட்டோம்' என்று ஒன்றுபட உறுதியேற்றனர். இந்தநிலையில், இளைஞர்களின் உணர்வுபூர்வமான கோரிக்கைக்குச் செவிசாய்க்கும் வகையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் பல்வேறு அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜாவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

'' 'தமிழகம் முழுவதும் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பனை செய்யக் கூடாது' என்ற இளைஞர்களின் ஒருமித்த குரலுக்கு உங்களின் பதில்?''

"ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் ஒற்றுமையாகப் போராடியது, வணிகர்களாகிய எங்களை உணர்வுபூர்வமாக ஈர்த்தது. அதனால்தான், வணிகர் சங்கம் சார்பில் ஒருநாள் ழுழுவதும் கடைகளை அடைத்து, இளைஞர்களுக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தோம். இதனையடுத்து, அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், 'தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடாது' எனத் தீர்மானம் நிறைவேற்றினோம். மாணவர்களும், பொதுமக்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால், இன்று (01-03-17) முதல் அதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்த உள்ளோம். தமிழகத்தைப்போன்று புதுச்சேரியிலும் வெளிநாட்டுக் குளிர்பானங்களைப் புறக்கணிப்பது என்று அந்த மாநில அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பினரும் முடிவு செய்துள்ளனர்.''

''வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குத் தடை என்பது தமிழகத்தில் சாத்தியம்தானா?''

"தமிழகம் முழுவதும் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டுக் குளிர்பானங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக அனைத்து


வணிகர்களுக்கும் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டுவிட்டது. உடல்நலத்துக்கு மெள்ளத் தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டுக் குளிர்பானங்களில் உள்ள நச்சுப்பொருள்களின் தன்மைபற்றி... சமூக ஆர்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோருடன் இணைந்து விளம்பர போர்டுகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பல்வேறு விழிப்பு உணர்வு பிரசாரம் மற்றும் பேரணிகளை நடத்தியுள்ளோம். இதுதொடர்பான விழிப்பு உணர்வு நோட்டீஸ் மற்றும் போஸ்டர்களைக் கடைகளில் ஒட்டியுள்ளோம். விரைவில், பொதுமக்களும் வெளிநாட்டுக் குளிர்பான மோகத்திலிருந்து விடுபடுவார்கள்.''

''இந்தத் தடைக்கு மாற்றாக நீங்கள் கொண்டுவந்திருக்கும் மாற்றுத் திட்டங்கள் என்ன?''

''வெளிநாட்டுக் குளிர்பானத் தடைக்கு வலுச்சேர்க்கும் வகையில், உள்நாட்டுக் குளிர்பானங்களை ஊக்குவித்து வருகிறோம். அத்துடன், நமது உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர், நுங்கு, மோர்,லஸ்ஸி , எலுமிச்சைச் சாறு, கம்பங்கூழ், பழச்சாறு, கரும்புச்சாறு, புதினா தண்ணீர் ஆகிய உடல்நலத்துக்கு ஆரோக்கியம் தரக்கூடியவற்றைக் கடைகளில் விற்பனை செய்ய வணிகர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். விரைவில், நம்மூர்க் குளிர்பானங்கள் விற்பனைக்கு வர உள்ளன. இவை, நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கும் விவசாயிகளின் வளர்ச்சிக்கும் துணை நிற்கும்.''

'' 'வெளிநாட்டுக் குளிர்பானங்களுடன் இறக்குமதியாகும் அந்த நாட்டு உணவுப் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும்' என்று இளைஞர்கள் குரல் எழுப்புகிறார்களே?

"இளைஞர்களின் உணர்வுகளையும், உள்ளூர் உற்பத்தியாளர்களின் வலிகளையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால், அதே நேரத்தில், சாக்லேட், பிஸ்கெட், பால் தொடங்கி ரெடிமேட் புரோட்டா, சப்பாத்தி, பீட்சாவரை கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான உணவுப்பொருட்கள் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுக்கு உடனடியாகத் தடை விதிப்பது என்பது சாத்தியமில்லாதது. இதற்கென எந்த மாற்றுத் திட்டமும் கொண்டுவராமல்... திடீரென இந்தப் பொருட்களுக்குத் தடை விதித்தால் வியாபாரிகள் பாதிப்படைவார்கள். ஆகவே, இவற்றைப் படிப்படியாகத்தான் நடைமுறைப்படுத்த முடியும்.''

''எவை வெளிநாட்டு உணவுப் பொருள்கள் என்கிற தயாரிப்புப் பட்டியல் ஏதேனும் இருக்கிறதா?''

"உணவுப் பொருள்களின் பெயர்களுடன் அந்தந்த நிறுவனங்களுடைய லோகோக்கள் அடங்கிய ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதன்படி, அந்த வெளிநாட்டு உணவுப் பொருள்களின் பெயர்களைத் தெரிந்துவைத்துக்கொண்டு நாமும் வாங்காமல் தவிர்த்து வந்தால்... அவர்களே தங்களுடைய விற்பனையை நிறுத்திக்கொள்வார்கள்.''

''நீங்கள் விதித்திருக்கும் தடையையும் மீறி, வெளிநாட்டுக் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டால்?''

''இதுதொடர்பாக விழிப்பு உணர்வு விளம்பரங்களைக் கடைகளில் வைத்திருக்கிறோம். ஆகவே, இதை மீறி வணிகர்கள் அவற்றை விற்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை, இதையும் தாண்டி அவர்கள் விற்பனை செய்தால் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும்.''

''உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க, வணிகர் சங்க சார்பில் ஏதாவது புதிய திட்டங்கள் உண்டா?''

''உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் சங்கத்தின் நோக்கம். அதற்காக, திறமையான மற்றும் தரமான உள்ளூர் உற்பத்தியாளர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கி, சங்கத்தின் சார்பில் உதவியும் செய்து தரப்படும்.''

''உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அரசு மற்றும் அதிகாரிகளின் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது?''

"உண்மையிலேயே உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு அரசும் அதிகாரிகளும் ஆதரவு தருவதில்லை. பல பன்னாட்டு நிறுவனங்களின் உணவுத் தயாரிப்பில் எந்தத் தவறு நடந்தாலும், அவற்றை நம் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஆனால், நம் நாட்டு தயாரிப்பில் ஒரு சின்ன தவறு என்றால்கூட, அதைப் பெரிதாக்கிவிடுகிறார்கள். முக்கியமாகப் பல உள்நாட்டு தயாரிப்புகளை நம்மூர் அதிகாரிகளே நசுக்குகிறார்கள். வெளிநாட்டு நிறுவனங்களின் கைகூலிகளாகவும் கைப்பாவைகளாகவும்தான் நமது அரசும் அதிகாரிகளும் தொடர்ந்து செயல்படுகிறார்கள்.''

''வணிகரீதியாக இவ்வளவு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் உங்களுக்கு, வருங்காலத்தில் அரசியலில் குதிக்கும் எண்ணம் இருக்கிறதா?''

"கண்டிப்பாக இல்லை. ஆனால், ஆட்சிக்கு வரும் அரசு மக்களுக்கு நன்மையைச் செய்யவில்லை என்றால், அவர்களுக்கெதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கத் தயங்கமாட்டோம். அதேநேரத்தில், அரசியலில் நேர்மையாளர்களை வரவேற்கவும் தயங்க மாட்டோம்."




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive