மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐரோம் ஷர்மிளா இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
இம்பால்:
மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிராக 16 ஆண்டுகளாக உடலை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐரோம் ஷர்மிளா, தனது போராட்டத்திற்கு உரிய பலன் கிடைக்காத நிலையில் அரசியலில்
இறங்கினர். தனிக்கட்சி தொடங்கிய அவர், சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியில் போட்டியிட்டார்.
ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், வெறும் 90 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த ஐரோம் ஷர்மிளா, டெபாசிட்டை இழந்தார். இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த அவர், இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார்.
‘தேர்தலில் தோல்விடைந்ததால் நான் வெட்கப்படவில்லை. ஆனால், தேர்தல் சலித்துவிட்டதால், எதிர்காலத்தில் போட்டியிட மாட்டேன். அதேசமயம், எனது கட்சியான மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி உயிர்ப்புடன் செயல்படவேண்டும் என விரும்புகிறேன்’ என்றார் ஐரோம் ஷர்மிளா.
ஐரோம் ஷர்மிளா போட்டியிட்ட தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடி வரும் முதலமைச்சர் இபோபி சிங் இந்த முறை 18,649 வாக்குகளும், பா.ஜ.க. வேட்பாளர் பாசந்தா 8179 வாக்குகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...