தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள
நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில்
அதிகாரிகள், அலுவலர்களுக்கு 'விழி பிதுங்கும்' நிலை ஏற்பட்டுள்ளது.மார்ச் 2
முதல் பிளஸ் 2 அதை அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் துவங்குகின்றன. பள்ளி
தேர்வுகளை புகார் மற்றும் முறைகேடின்றி
நடத்துவதற்கு கல்வித்துறை அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
எடுத்து வருகின்றனர். இந்நிலையில், பிற துறைகளின் அதிகாரிகள், அரசியல்
பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தலையீடு காரணமாக அரசு
ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணிகள் ஒதுக்கீடு செய்வதில், அனைத்து
மாவட்டங்களிலும் பெரும் சவாலாக இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பொதுவாக, ஒரு தேர்வு மையத்தில் முதன்மை
கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறை கண்காணிப்பாளராக மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர், ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். ஒரு
மையத்தில் மாணவர் எண்ணிக்கை 500க்கு மேல் இருக்கும்பட்சத்தில், கூடுதல்
முதன்மை மற்றும் கூடுதல் துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவர். கிராமப்புற
பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள், நகர்ப் பகுதிகளில் தான்
வசிக்கின்றனர். இதனால் தேர்வு நேரத்தில் அவர்கள் நகர் பகுதி பள்ளிகளில்
பணியாற்ற விரும்புகின்றனர். அதேநேரம், 5 - 10 கி.மீ.,க்குள் உள்ள
பள்ளிகளில் தான் தேர்வுப் பணி ஒதுக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள்
விதிக்கின்றனர்.இதனால் கல்வி மாவட்ட எல்லையோரங்களில், அமைந்துள்ள
பள்ளிகளில் அரசு ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கினால் அரசியல், அதிகாரிகள்,
சங்கம் பின்னணியில் அருகாமை பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ய
வற்புறுத்துகின்றனர். முடியாதபட்சத்தில், மருத்துவ சான்றிதழ் சமர்ப்பித்து
தேர்வுப் பணியில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர். இதனால், அதுபோன்ற
பள்ளிகளில் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,
தேர்வுப் பணிகள் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு தேர்வுப்
பணி உழைப்பூதியம் வழங்கப்படுவதில்லை. ஆனாலும் மாவட்ட கல்வி அதிகாரிகள்
பிறப்பிக்கும் உத்தரவை தட்டாமல் நிறைவேற்ற வேண்டியுள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர்
கூறியதாவது: மாநிலம் முழுவதும் இப்பிரச்னை உள்ளது. இயக்குனர், இணை
இயக்குனர் அந்தஸ்தில் உள்ள பல அதிகாரிகளே அரசு ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட
பள்ளி மையங்களில் பணி ஒதுக்க வேண்டும் என வாய்மொழி உத்தரவிடுகின்றனர்.
சங்க நிர்வாகிகளும் நெருக்கடி கொடுக்கின்றனர். இல்லாவிட்டால்
போராட்டங்களில் இறங்கி விடுகின்றனர். இச்சூழ்நிலையில் தான் மெட்ரிக் பள்ளி
ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்க வேண்டி வருகிறது. சில அரசு உதவி பெறும் மற்றும்
தனியார் பள்ளிகள் அதிகாரிகள் உதவியுடன் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை
தேர்வு பணி ஒதுக்கவும் வியூகம் வகுக்கின்றனர். இதற்கு ஒருசில அதிகாரிகளும்
ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சிபாரிசு காரணமாக தேர்வுப் பணி ஒதுக்கீடு
உத்தரவு அடிக்கடி மாற்றப்படுவதால் கல்வி அலுவலர்கள் கடும் மனஉளைச்சலுக்கு
ஆளாகின்றனர், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...