'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக்
கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட்
குழு வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில்,
கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு
ஈடுபட்டுள்ளது.இது தொடர்பாக, பல்வேறு ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், லோக்சபா,
பா.ஜ., - எம்.பி., பகவத் சிங் கோஷ்யாரி தலைமையிலான, பார்லிமென்ட் மனுக்கள்
நிலைக் குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்வேறு
பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்துள்ளது; அதில்
கூறியுள்ளதாவது: கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசு எடுத்து
வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்; அதே நேரத்தில், தேசிய கல்வி கொள்கையை
விரைவில் அறிவிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் இது குறித்த அறிக்கையை
தாக்கல் செய்ய வேண்டும்.ஐந்தாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற
முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில், மாணவர்களுக்கு சிறந்த முறையில்
பயிற்சிகள் அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு
அளிக்கப்படும் கல்வி குறித்து, அவ்வப்போது தேர்வு நடத்தி மதிப்பிட
வேண்டும். அதேபோல், ஆசிரியர்களின் செயல்பாடுகள் குறித்தும் மதிப்பிட
வேண்டும். கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், அங்குள்ள வசதிகள் குறித்தும்
கண்காணிக்க வேண்டும். ஆசிரியர்கள், கல்வி நிறுவனத்தின் செயல்பாட்டை
கண்காணிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கருத்தை அறியும்
வகையில், புதிய முறையை அறிமுகம் செய்ய வேண்டும்.இவ்வாறு பார்லி., குழு
பரிந்துரை அளித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...