மேற்கு வங்க மாநிலத்தில், சமீபத்தில் துவங்கிய, பிளஸ் 2 தேர்வில், மகனுடன் பெற்றோரும் தேர்வெழுதினர்.
மேற்கு வங்க மாநிலத்தில், திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த, மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்; இங்கு வடக்கு பட்டிகாபரி கிராமத்தை சேர்ந்த விவசாயி, பல்ராம் மோண்டல், 42; இவரது மனைவி கல்யாணி, 32. இவர்களது மகன் பிப்லப், 18, நாடியா மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி யில், பிளஸ் 2 படித்து வருகிறான். அதே பள்ளியில், பல்ராமும், கல்யாணியும் படிக்கின்றனர். சமீபத்தில் துவங்கிய மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வில், பிப்லப்புடன் அவனது பெற்றோரும் தேர்வு எழுதினர். இதுகுறித்து பல்ராம் கூறியதாவது: சிறு வயதில் தந்தை இறந்ததால், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயத்தில் ஈடுபட்டேன். எங்கள் மகன் பிப்லப், பள்ளியில் படிக்கும்போது, நாங்களும் படிப்பை தொடர விரும்பினோம். ரவீந்திர பாரதி திறந்தநிலை கல்வி மையத்தில் படித்து, 2014ல் நானும், 2015ல், என் மனைவி கல்யாணியும், 10ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றோம். அதைத் தொடர்ந்து, எங்கள் மகனுடன், பிளஸ் 2 தேர்வை ஒன்றாக எழுத முடிவு செய்தோம். மகன் படிக்கும் பள்ளியிலேயே எங்களுக்கும் இடம் கிடைத்தது. நாங்கள் படிப்பதற்கு, எங்கள் மகன் உதவினான். இவ்வாறு அவர் கூறினார். இவர்களின் முயற்சியை பாராட்டிய, நாடியா தொகுதி, எம்.எல்.ஏ., சமீர் போத்தார் கூறியதாவது: படிப்பை இடையில் நிறுத்தியவர்கள் மீண்டும் தொடர விரும்பினால், அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். ஆர்வமுடன் படித்து தேர்வெழுதிய பல்ராம் - கல்யாணி தம்பதியை முன் உதாரணமாக வைத்து, மற்றவர்களும் படிப்பை தொடர வேண்டும்இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...