அரசு தேர்வுத் துறையின் இணையதளம் ஜவ்வாக இழுத்ததால், தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகளை அறிய, மாணவர்கள், 'மவுசு'டன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டது.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் உயர்கல்வி படிக்க, மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, மாநில அளவிலும், பின், தேசிய அளவிலும், தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, மாநில அளவிலான தேர்வு, 2016 நவ., 5ல், தமிழகம் முழுவதும் நடந்தது. மொத்தம், 449 மையங்களில், 6,580 பள்ளிகளைச் சேர்ந்த, 1.55 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களுக்கான தேர்வு முடிவு, நேற்று பிற்பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்தார். அதனால், ஒன்றரை லட்சம் மாணவர்கள் சார்பில், அவர்களின் பெற்றோரும், ஆசிரியர்களும், நேற்று பிற்பகலில் இணையதளத்தை இயக்கினர்; ஆனால், தேர்வு முடிவை அறிய முடியவில்லை.
இணையதளத்தில், தேர்வு முடிவுக்கான பகுதி, நீண்ட நேரமாக சுற்றிக் கொண்டேயிருந்தது.அதனால், மாணவர்களும், பெற்றோரும், இரண்டு மணி நேரத்துக்கு மேல், மவுசுடன் மல்லுக்கட்டும் நிலை ஏற்பட்டது. இது குறித்து, பலர் தேர்வுத் துறைக்கு புகார் தெரிவித்தனர்.
இறுதியாக, மாலை, 5:00 மணி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்க முடிந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.இதில் தேர்ச்சி பெறுவோர், மே, 14ல் நடக்கும் தேசிய தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். அதில் தேர்ச்சி பெறுவோர், தரவரிசை பட்டியலின்படி, உதவித்தொகை பெற தகுதி பெறுவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...