தனியார் பள்ளிகளில், பெரும்பாலானவற்றில், 20 முதல், 30 சதவிகிதம் வரை கல்விக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பஸ் கட்டணத்தையும் கணிசமாக உயர்த்தியுள்ளதால்,
பெற்றோர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சேலம் மாவட்டத்தில், 150க்கும்
மேற்பட்ட மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், 300க்கும் மேற்பட்ட நர்ஷரி
பிரைமரி பள்ளிகளும் உள்ளன.
அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கவுரவ குறைச்சலாக
பெற்றோர் கருதுவதால், தனியார் பள்ளிகளில் ஆண்டுக்காண்டு மாணவர்களின்
எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி, பல்வேறு
விதங்களில் கட்டணக்கொள்ளையில் தனியார் பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன.
இதை தடுக்க, தமிழக அரசு கட்டண நிர்ணயக்குழு
அமைத்து, ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால், இந்த கட்டண
நிர்ணயம் குறித்து எந்த முன்னணி பள்ளிகளும் கண்டுகொள்வதில்லை.
அதே போல், மூன்றாண்டுகளுக்கு ஒரே கட்டணம் என நிர்ணயித்திருந்தாலும், ஆண்டுக்காண்டு கட்டணத்தை அதிகரிக்கவும் தவறுவதில்லை.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆண்டு முழு
தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக்கட்டணம் செலுத்தும்படி,
பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதில், பல பள்ளிகள் கடந்த ஆண்டு
கல்விக்கட்டணத்தை காட்டிலும், 20 சதவிகிதம் முதல், 30 சதவிகிதம் வரை,
உயர்த்த்தியுள்ளன. மேலும் பஸ் கட்டணமும், 20 சதவிகிதம் வரை
உயர்த்தப்பட்டுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது:
தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் வசூல் செய்வதில், அரசு கெடுபிடி எதுவும்
இல்லாததால், ஆண்டுக்காண்டு கல்விக்கட்டணத்தை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பள்ளியில் சேர்த்த பின், பெற்றோர்களும் வேறு வழியின்றி, அவற்றை செலுத்த
வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால், கல்விக்கட்டணம் பெற்றோர்களுக்கு
சுமையாக உருவெடுத்துள்ளது. இன்ஜினியரிங் படிப்புக்கு செலவழிப்பதை விட,
எல்.கே.ஜி., படிப்புக்கு அதிக அளவில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. பிரபல
பள்ளிகளில், தனி ராஜாங்கமே நடத்துகின்றனர்.
அவர்கள் இஷ்டத்துக்கு கல்விக்கட்டணம் மற்றும்
இதர கட்டணங்கள் வசூலிக்கின்றனர். இந்த ஆண்டு கல்விக்கட்டணத்தில் கணிசமாக
உயர்த்தியுள்ளனர். குறிப்பாக சேலத்தின் பிரபல பள்ளி ஒன்றில், கடந்த ஆண்டை
விட, 20 ஆயிரம் ரூபாய் வரை கட்டணத்தை அதிகரித்துள்ளது.
அதே போல், டிரைவர் பற்றாக்குறை, டீசல்
விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களை காட்டி, பஸ் கட்டணமும் உயர்த்தியுள்ளனர்.
இந்த திடீர் கட்டண உயர்வு, பெற்றோருக்கு பெரும் சுமையாக உருவாகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...