மொபைல் தொலைப்பது என்பது சின்ன வயதில் பென்சில் தொலைத்ததின் பரிணாம
வளர்ச்சிகளில் ஒன்றாக மாறிவிட்டது.
ஆண்ட்ராய்டு மொபைல் தொலைந்து போனால்
அடுத்தகட்ட நடவடிக்கையாக புது மொபைல் வாங்க நடையைக் கட்டுவது சிலரின்
வழக்கம். மொபைலோடு தொலைந்துபோன தகவல்களை நினைத்து வருத்தப்படுவது சிலரின்
வழக்கம். ஆனால் மொபைல் தொலைந்துபோனால் அதைக் கண்டுபிடிக்கவும்,
அதிலிருக்கும் தகவல்களைப் பாதுகாக்கவும் மேற்கொள்ள வேண்டிய குறைந்தபட்ச
பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க நினைப்பது வெகு சிலர்தான். அதற்கு காரணம்,
என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாததுதான்.ஆண்ட்ராய்டு உபகரணங்களைப் பொறுத்தவரை பொதுவாக கூகுளின் 'Android Device Manager' வசம் தான் அனைத்துத் தகவல்களையும் அணுகும் உரிமை இருக்கும். ஒருவேளை அந்த உரிமையை ஸ்மார்ட்போனில் மூன்றாம் நபர் அப்ளிகேஷன் ஒன்றை நிறுவும்போது அதற்கு நாம் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. 'Android Device Manager' உங்கள் மொபைலின் டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டராக இருக்கும் பட்சத்தில், அந்த மொபைல் தொலைந்தால் ப்ரெளசர் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்.
முதலாவதாக, Settings சென்று Security ஆப்சனைத் தேர்வு செய்யுங்கள். அதில் Device Administrators என்ற ஆப்சனின் கீழ் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரைத் தேர்வு செய்யுங்கள். இப்படித் தேர்வு செய்வதன் மூலம் உங்கள் மொபைலில் இருக்கும் தகவல்களைத் தேவைப்படும்போது அழிக்கவும், ஸ்க்ரீன் லாக் பாஸ்வேர்டை மாற்றவும், ஸ்க்ரீனை லாக் செய்யவும் அனுமதி அளிப்பதாகப் பொருள். ஒருவேளை உங்கள் மொபைல் தொலையும்போது அதிலிருக்கும் அத்தனைத் தகவல்களையும் அழிப்பதற்கும், மொபைல் ஸ்க்ரீன் லாக்கை மாற்றவும் இது உதவும்.
மொபைல் தொலைவதில் இருவகை உண்டு. வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் மறதி காரணமாக நம்மையறியாமல் தொலைப்பது, வெளியிடத்தில் தொலைப்பது / திருடுபோவது என இருவகை உண்டு. மறதி காரணமாக மொபைலை தொலைத்தால் பொதுவாக மிஸ்டு கால் மூலம் கண்டறிவோம். மொபைல் சைலன்ஸ் மோடில் இருந்தால் மிஸ்டு கால் மூலமாக மொபைலைக் கண்டறிவது சிரமம். ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் வழியாக மொபைல் சைலன்ஸ் மோடில் இருந்தாலும் மொபைலை ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை ப்ரெளசரில் இயக்க, மொபைலில் இணைத்திருந்த கூகுள் அக்கவுண்ட்டில் ப்ரெளசர் மூலம் லாகின் செய்து கொள்ளவேண்டும். அதன்பின் ப்ரெளசரில் https://www.google.com/android/devicemanager என்ற முகவரிக்குச் சென்றோ அல்லது கூகுளில் 'Find your Phone' என என்டர் செய்தால் டிவைஸ் மேனேஜரைப் பயன்படுத்த முடியும். தற்போது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் திரையில் தோன்றும்.
சைலன்ஸ் மோடில் உள்ள மொபைலை ஒலிக்கச் செய்ய :
வீடு அல்லது அலுவலகத்தில் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக மொபைலை சைலன்ஸ் மோடில் வைத்திருப்போம். அந்த நேரம் பார்த்து எங்கோ மறதியாக வைத்துவிட்டால் மிஸ்டு கால் கொடுத்துக்கூட கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. மேலே சொன்னபடி ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்தபிறகு, திரையில் தோன்றும் 'Ring' என்ற ஆப்சனை கிளிக் செய்யும்போது, உங்கள் மொபைல் அல்லது டேப் சைலன்ஸ் மோடில் இருந்தால் கூட அதன் டீஃபால்ட் ரிங் டோனில் ஒலிக்கும். இதன் மூலம் மறதியாகத் தொலைத்துவிட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முடியும். ஆனால் இதைச் செய்வதற்கு உங்கள் மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் இணையத்தோடு இணைந்திருக்க வேண்டும்.
ஸ்மார்ட்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிய :
உங்கள் மொபைலில் ஜி.பி.எஸ் எனப்படும் லொக்கேசனை ஆன் செய்திருந்தீர்கள் என்றால் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் உள்ள 'Locate Device' என்ற பட்டனை கிளிக் செய்தால், ஸ்மார்ட்போன் தற்போது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். சமீபத்தில் ஜி.பி.எஸ் மூலமாக மொபைல் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை லொக்கேசன் ஹிஸ்டரி மூலமாகத் தெரிந்து கொள்ளலாம். மறதியாகத் தொலைத்திருந்தாலும், திருடுபோயிருந்தாலும் ஸ்மார்ட்போன் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆப்சன் உதவும்.
மொபைலில் உள்ள தகவல்களை அழிக்க :
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டதாக வைத்துக் கொள்வோம். 'மொபைல் போனாக்கூட இன்னொன்னு வாங்கிக்கலாம் பாஸ். ஆனா அதுல இருக்குற டேட்டாவ வேற யாரும் தப்பா பயன்படுத்திடக் கூடாது' என நினைப்பவர்களுக்கு இந்த ட்ரிக் உதவும். தொலைந்துபோன மொபைலில் டேட்டா ஆன் செய்யப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்து 'Erase' என்ற ஆப்சனை கிளிக் செய்தால் மொபைலில் இருக்கும் அத்தனைத் தகவல்களும் டெலீட் செய்யப்பட்டுவிடும்.
மொபைலை லாக் செய்ய :
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரில் லாகின் செய்தபின், 'Lock' ஆப்சனை கிளிக் செய்தால் மேலே உள்ளது போல் ஒரு திரை தோன்றும். அதில் புதிதாக பாஸ்வேர்டு கொடுத்து, உங்கள் மாற்று தொடர்பு எண்ணையும் கொடுத்து லாக் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் தொலைந்து போன மொபைலை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அதையும் மீறி அவர் பயன்படுத்த வேண்டுமென்றால், உங்கள் மாற்று தொடர்பு எண் விவரத்தோடு ஒரு திரை தோன்றும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு நேரடியாக அழைப்பு வரும்.
ஆண்ட்ராய்டு தவிர்த்து பிற இயங்குதளங்கள் கொண்ட மொபைல்களையும், லேப்டாப்களையும் ட்ராக் செய்யும் வழிமுறைகளைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். மேலே சொன்ன அத்தனை வழிமுறைகளுக்கும் உங்கள் மொபைல் இணையத்தோடு இணைந்திருந்தால் மட்டுமே வேலை செய்யும். உங்கள் மொபைலில் இணையமே இல்லாத பட்சத்தில் உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். cop@vsnl.net என்ற முகவரிக்கு கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண், காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ் மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த செல்போன் பயன் படுத்தப்படும்பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்.
நன்றி: ஆனந்த விகடன்.
Good information sir...thank you
ReplyDelete