தமிழக அரசு சார்பில் உயர்கல்விக்கான ஆலோசனை
முகாம்கள் 541 இடங்களில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஏப்ரல்
6 அல்லது 7 ஆகிய தேதியில் நடைபெறும் முகாமில் பங்கேற்கும்
மாணவ-மாணவிகளுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்
என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில பல்வேறு தரப்பினரும் ஆலோசனை கருத்தரங்குகளை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அத்தகைய ஆலோசனை முகாம்கள் அரசு சார்பிலேயே நடத்தப்பட உள்ளது.
இதற்கான அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. நிகழ் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்காக இந்த ஆலோசனை முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 32 மாவட்டத் தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என 541 இடங்களில் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த முகாம்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், தனியார்கள் ஒத்துழைப்புடன் அரசுப் பள்ளிகளிலேயே நடத்தப்படும். சிறப்பான மருத்துவர்கள், பொறியியல் வல்லுநர்கள், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோர் உயர்கல்விக்கான ஆலோசனைகளை வழங்குவர். அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு தொடர்பாகவும் ஆலோசனைகள் கொடுக்கப்படும் என்றார் செங்கோட்டையன்.
இதைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில்கள்:-
கேள்வி: பிளஸ் 2 வகுப்புக்கான புதிய வரைவு பாடத் திட்டத்துக்கு இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்குமா?
பதில்: புதிய பாடத் திட்டம் தொடர்பாக ஒரு வாரத்துக்குள் தமிழக அரசின் சார்பில் நல்ல முடிவுகள் வெளியிடப்படும்.
கேள்வி: தனியார் பள்ளி கட்டண முறைப்படுத்தும் குழுவுக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லையே?
பதில்: இதற்கான இறுதி முடிவுகள் துறை அளவில் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு இறுதி அறிவிப்பு வெளியிடப்படும். ஓரிரு நாள்களில் இந்த அறிவிப்பு வெளியாகும்.
கேள்வி: மருத்துவத்துக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு தமிழகத்தில் தடை வருமா?
பதில்: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த முதல்வர், இதுகுறித்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த விஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...