வங்கிகளில் எல்லா கணக்குகளிலும் நெட் பேங்கிங் வசதி கட்டாயமாக்கப்பட
வேண்டும் என்றும், மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்
என்றும் வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புழக்கத்தில் இருந்த
ரூ.1000, ரூ.500 வாபஸ் பெற்ற பிறகு கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை
சமாளிக்கவும், கருப்பு பணம்
உருவாவதை தடுக்கவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. இந்த முயற்சியில் ‘பீம் ஆப்’ என ஒரு ஆப்ஸ் உருவாக்கப்பட்டது. அதே போல், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், வங்கிகளுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘அனைத்து வங்கி கணக்குகளிலும் மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும். அதே போல், எல்லா கணக்குகளுக்கும் கட்டாயமாக நெட்பேங்கிங் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்’’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ‘‘இந்த நடவடிக்கையானது டிஜிட்டல் பரிவர்த்தனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அத்துடன் பணபரிமாற்றங்கள் விரைவாக நடக்கும். ஆன்லைன் பரிமாற்றத்திற்கு ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் உருவாவதற்கும் வழி ஏற்படும்’’ என்று தெரிவித்தார். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தற்போது வங்கிகளில் செயல்படும் கணக்குகளில் 35 சதவீத கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளது. அவற்றை ஆன்லைன் சேவைக்கு மாற்றுவதில் சிக்கல் உள்ளது. எனவே, ஆதார் இணைப்பு வேகப்படுத்தப்படுகிறது’’ என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...