* 2015-16ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 25 ஆயிரம்
மாணவ-மாணவிகள் எழுதினார்கள். இந்த கல்வி ஆண்டில் 8.98 லட்சம் பேர்
எழுதுகிறார்கள்.
*கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 7 தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2
பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ,
மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3
ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2
மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கும் என்று கடந்த
மாதம் தமிழக அரசு அறிவித்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 98 ஆயிரத்து 763
மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அவர்களில் 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 பேர்
மாணவர்கள், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 பேர் மாணவிகள்.
தனித்தேர்வர்களாக 20 ஆயிரத்து 448 மாணவர்களும், 11,392 மாணவிகளும், பிற
பாலினத்தவர் 3 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழகம் மற்றும்
புதுச்சேரியில் 2,427 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும்
தமிழ் வழியில் படித்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம்
செலுத்துவதில் இருந்து அரசு விலக்கு அளித்து வருகிறது. அந்த வகையில்
இந்தாண்டு 5 லட்சத்து 69 ஆயிரத்து 304 பேர் தேர்வு கட்டண சலுகை
பெற்றனர்.பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒவ்வொரு
மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 300 பேர்
கொண்ட பறக்கும் படை வீதம் தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும்
படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு நடக்கும் போது, அனைத்து
மையங்களில் திடீரென சோதனை மேற்கொள்வார்கள்.
மாவட்ட வாரியாக தேர்வை கண்காணிக்க 6 இயக்குனர்கள், 20 இணை இயக்குனர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடக்கும் போது, மாணவர்கள் முறைகேடுகளில்
ஈடுபடாமல் இருக்க பல்வேறு கண்காணிப்பு ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை
செய்துள்ளது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் செருப்பு, ஷூ, டை அணிந்து வருவது
தடை செய்யப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு வர அனுமதி கிடையாது. உரிய
பாடங்களை தவிர மற்ற பாடங்களுக்கு கால்குலேட்டர் எடுத்து வரக்கூடாது.
ஆள்மாறாட்டத்தை தடுப்பதற்காக தேர்வு எழுதும் மாணவர்களின் புகைப்படத்துடன்
கூடிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விடைத்தாளிலும்
மாணவர்கள் போட்டோ இடம் பெறுகிறது. வருகை பதிவேட்டிலும் மாணவர்களின்
புகைப்படம் இடம் பெறுகிறது.
ஹால் டிக்கெட்டிலும், வருகை பதிவேட்டில் உள்ள போட்டோவிலும் வேறுபாடு
இருந்தால் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். மாவட்ட வாரியாக
கலெக்டர்கள், எஸ்.பிக்கள், வருவாய்துறையினர் தலைமையில் தேர்வை கண்காணிக்க
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை தொடங்கும் பிளஸ் 2 தேர்வில் முதல் நாள் ‘தமிழ் தாள் 1’ தேர்வு
நடக்கிறது. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. மாணவர்கள் தேர்வு
அறைக்குள் 9.30 மணிக்கு வர வேண்டும். 10 மணிக்கு விடைத்தாள்
கொடுக்கப்படும். அந்த விடைத்தாளில் மாணவர்களின் புகைப்படம், தேர்வு
பதிவெண், தேர்வு எழுத வேண்டிய பாடம், தேர்வு மையம் போன்றவை முகப்பு தாளில்
அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை சரிபார்க்க 5 நிமிடம் மாணவர்கள் எடுத்து
கொள்ள வேண்டும்.
அதை சரிபார்த்த பிறகு மாணவர்கள் முகப்புதாளில் கையொப்பமிட வேண்டும். சரியாக
10.05 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். அதை படித்து பார்ப்பதற்கு
மாணவர்கள் 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதைதொடர்ந்து 10.15 மணிக்கு, விடை
எழுத தொடங்க வேண்டும். மொழி பாடத்திற்கு கோடிட்ட 38 பக்கம் கொண்ட
விடைத்தாள் வழங்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் விடைத்தாள்
வழங்குவார்கள். மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடையும். இத்தகவலை
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு அறை போன் எண்கள்
பிளஸ் 2 தேர்வுகள் நாளையும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் வரும் 8ம் தேதியும்
ெதாடங்க உள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் தொடர்பாக மாணவர்கள்/ தேர்வர்கள்/
பொதுமக்கள் தங்களின் கருத்துக்கள், புகார்கள், சந்தேகங்களை தேர்வுக்
கட்டுப்பாட்டு அறை எண்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 8012594114,
8012594115, 8012594122, 8012594124 ஆகிய எண்களில் தேர்வு காலங்களில், காலை
8 மணி முதல் இரவு 8 மணி வரை தேர்வுக்கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு
விளக்கம் பெறலாம் என அரசுத்தேர்வுகள் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...