Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“150 மணி நேரத்தில் 50 அறிவிப்புகள்” உ.பி-யை உலுக்கும் ஆதித்யநாத்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதல்வராக பெரும் கோபத்துக்குச் சொந்தக்காரரான சாது, ஆதித்யநாத் யோகி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சர்ச்சைகளுக்குப் பஞ்சம் வைக்காத இவர், நாடாளுமன்ற உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்தவர். இந்து மகாசபைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார். முதன்முதலாக 26 வயதில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டபோது ஆரம்பித்த இவரின் அரசியல் பயணம் தற்போது உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பை வந்து அடைந்திருக்கிறது.
இவரது இயற்பெயர், அஜய் மோகன் பிஸ்ட். இவரது இளமைக் காலம் குறித்து சரியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், ராமர் கோவில் விவகாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டபோது பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்தார். அந்த போராட்டங்களில் ஆர்வம் காட்டிய முன்னாள் எம்.பி.யான மஹிந்த ஆதித்யநாத்தை தனது அரசியல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட்டார். அதன் காரணமாகவும் அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் தனது பெயரை யோகி ஆதித்யநாத் என மாற்றிக் கொண்டார். 

சர்ச்சைகளை விரும்பி ஏற்றுக் கொள்ளும் பக்குவம் கொண்டவர், யோகி ஆதித்யநாத். அதற்காக பல முறை வழக்குகளில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இப்போதும் கூட அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. லவ் ஜிகாத், பசுவதை தொடர்பாக இவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளை கிளப்பிய போதிலும், தனது கருத்தை திரும்பிப் பெற்றுக் கொள்ளும் வழக்கம் இவரிடம் இருந்ததில்லை. எப்போதும் கனல் கக்கும் பேச்சுக்களும், செயல்பாடுகளுமே இவரது டிரேட் மார்க்.
உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலின்போது இவர் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. ஆனாலும், தற்போது பா.ஜ.க.வுக்கு பெரும்பானமை கிடைத்ததால், இவரை முதல்வராக்குவதற்கு எந்த தடையும் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லை. முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் செயல்பாடுகள் அதிரடியாக இருக்கின்றன. இவரது அதிரடி அறிவுப்புகள் உத்தரபிரதேச மாநிலத்தின் அரசியலை சூடேற்றிக் கொண்டு இருக்கின்றன. இவரின் செயல்பாடுகள் சில கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் சூழலில், பல செயல்பாடுகள் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருவதையும் மறுக்க இயலாது.

ஆனால், இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த அறிவிப்புக்கு தயாராகி வருகிறார், யோகி ஆதித்யநாத். இதுதான் அவரது ஸ்டைல். முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், இதுவரை அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்படவில்லை. சட்ட மன்றக் கூட்டமும் நடைபெறவில்லை. ஆனால், பொறுப்பேற்ற 150 மணி நேரத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் 50 அதிரடித் திட்டங்களை அறிவித்து உள்ளார். இவற்றில், இறைச்சிக் கடைகளை மூட அதிரடி உத்தரவு, சாலையோர ரோமியோக்களை ஒடுக்க சிறப்பு காவல்படை அமைப்பு போன்றவை சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. ஆனால், யோகி ஆதித்யநாத் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார். 

அதிரடியான 50 அறிவிப்புகள்!  

முதல்வர் யோகி ஆதித்யநாத், 50 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் மாநிலம் முழுவதும் பலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூடும் இடங்களில் கூட இந்த அறிவிப்புகள் பற்றி பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதங்கள் நடக்கின்றன.

அந்த அறிவிப்புகள் இதோ...

1. இந்துக்கள் புனிதப் பயணமாகச் செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இதுவரை 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகை இனிமேல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
2. உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் வரும் ஜூன் 15&ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் குழிகள் அற்றதாக மாற்றி அமைக்கப்படும்.
3. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சாலைகளிலும் போக்குவரத்தின்போதும் சாலையோர ரோமியோக்களால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால் இந்த ரோமியோக்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு காவல்படை அமைக்கப்படும்.
4. பெண்களைப் பாதிக்கும் ஈவ்&டீசிங் செயல் நடைபெற்றால் அல்லது இது தொடர்பான புகார் ஏதேனும் வருமானால், அதற்கு அந்தப் பகுதியில் உள்ள அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியில£ன நடவடிக்கையும் எடுக்கப்படும்.
5. ஒருமித்த கருத்து கொண்ட ஆணும் பெண்ணும் பொது இடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.
6. காவல் நிலையத்துக்கு புகார் செய்ய வருபவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டும்.
7. உத்தரப்பிரதேச காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமான்ய மக்களிடம் காவலர்கள்பொறுப்பு உணர்வுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.
8. காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் அமர இடம் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அமரும் இடம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
9. காவல்நிலையங்களில் ரிசப்ஷன் அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு ஆண் மற்றும் பெண் காவலர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்பெக்டரும் அங்கே இருந்து புகார் அளிக்க வருபவரின் குறைகளைக் கேட்க வேண்டும்.
10. காவல்நிலையங்களில் கூடுதல் வசதிகள் உடனடியாக செய்யப்படும்.
11. காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும்.   
12. மாநிலம் முழுவதும் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்காக பெண் காவலர் தேர்வு நடத்தப்படும்.
13. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறியும் வகையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மூலமாக புளூப்ரிண்ட் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் எந்த இடம் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக அறிய  வசதி செய்யப்படும்.
14. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பான், குட்கா போன்ற பொருட்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.
15. மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.
16. அரசு அலுவலகங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படும்.
17. அரசு அலுவலகங்களில் இனி ஃபைல்கள் காத்திருப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. உடனடியாக அனைத்துக் கோப்புகளும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
18. மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
19. அரசு அலுவலகங்களில் இனிமேல் ஊழியர்கள் தாமதமாக வர முடியாது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தப்படும்.
20. அனைத்து அரசு அலுவலகங்களின் அறைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும்.
21. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த அலுவலகக் கோப்புகள் எதையும் வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.
22. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.
23. அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறை குறித்து முழுமையாக அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்படும். அதில் துறை சார்ந்த விவரங்கள் குறித்துப் பேச வேண்டும்.
24. ஒருவேளை மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் எங்காவது எரிந்துவிட்டால், சம்பவ இடத்துக்கு அதிகாரிகளே நேரில் செல்ல வேண்டும். அவர்களின் முன்னிலையிலேயே அதனை மாற்றுவதற்கான பணிகள் நடக்க வேண்டும்.
25. பசுக்கள் திருடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
26. அனுமதி பெறாத இடங்களில் இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அவை உடனடியாக மூடப்படும்.
27. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். அவசியம் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.
28. அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை அளிக்க வேண்டியது அவசியம்.
29. சொத்துப் பட்டியலை அடுத்த 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
30. அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும்.
31. பா.ஜ&வின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள், தங்களுடைய துறை சார்ந்து மக்கள் நலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.
32. நவராத்திரி, ராமநவமி போன்ற விஷேச தினங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்குமாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
33. நவராத்திரியின் போது பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.
34. ராமநவமி விழாவின்போது, அயோத்தியாவில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகாரிகள் முடிந்த அளவுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.
35. ஒவ்வொரு கிராமத்திலும் மின் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
36. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் கட்டாயமாக மருத்துவமனையில் இருக்க வேண்டும்.
37. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், சாமான்ய மக்கள் மருந்துப் பொருட்களை வாங்கும் வகையில் 3,000 புதிய மருந்தகங்கள் தொடங்கப்படும்.
38. சுகாதாரத் துறை சார்பாக தனியாக ஆப் உருவாக்கப்படும். இதன் மூலம், நோயாளிகள் தங்கள் குறைகளை தெரியப்படுத்த வசதி கிடைக்கும்.
39. அலாகாபாத், மீரட், ஆக்ரா, கோரக்பூர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
40. விவசாயிகள் விளைவிக்கும் கோதுமையின் 100 சதவிகிதத்தையும் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யும்.
41. சட்டிஸ்கரில் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்வது போன்ற நடைமுறை உத்தரப்பிரதேசத்திலும் பின்பற்றப்படும்.
42. கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்த ஆலைகள் 14 தினங்களுக்குள் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும்.
43. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
44. நல்ல முறையில் தரமான வகையில் பணிகளைச் செய்பவர்களுக்கு மட்டுமே அரசின் காண்ட்ராக்ட் பணிகள் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.
45. வெள்ளம், வறட்சி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
46. பாரதப் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் பணிகள் அனைத்தும் மாநில வீட்டுவசதி வாரியத்தின் மூலமாகவே செய்யப்படும்.
47. கல்வித் துறையைப் பொறுத்தவரையிலும், ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் இடங்களில் குரு&சிஷ்யன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
48. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது.
49. ஆசிரியர்கள் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் அவசியம் இல்லாமல், செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.
50. அனைத்து கிராமங்களும் சாலை வழியாக இணைக்கப்படும். சாலை வசதி இல்லாத எந்த கிராமமும் இருக்கக் கூடாது.
இந்த அதிரடி அறிவிப்புகளால் பொதுமக்கள் இடையே சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில், யோகி ஆதித்யநாத் நல்லவரா? கெட்டவரா? என்கிற விவாதமும் பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருவதே உண்மை.
பதில் சொல்லுங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்!
நன்றி- ஆனந்த விகடன்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive