உயர்
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தேர்வில்,
மொழி பாடங்கள் உட்பட, 14 பாடங்களுக்கு, தமிழில் தேர்வு நடத்த, அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது. உதவி பேராசிரியர் பணியில் சேர, முதுநிலை பட்டதாரிகள்,
மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற
வேண்டும். இதில், நெட் தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடத்தப்படும்.
அதனால், மாநில மொழிகளில் நடத்தப்படும் செட் தேர்வையே, தென் மாநில
பட்டதாரிகள் விரும்புகின்றனர்.
இந்த ஆண்டுக்கான செட் தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது. தேர்வுக்கான பதிவு முடிந்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பில், கொடைக்கானல் தெரசா மகளிர் பல்கலை சார்பில், செட் தேர்வு நடத்தப்படுகிறது.செட் தேர்வு எப்போதும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு, மொழி பாடங்கள், அந்தந்த மாநில மொழிகளிலும், மற்ற பாடங்கள், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழில் தேர்வு நடத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்ற கிளையில், வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, தமிழில் தேர்வு நடத்தப்படும் என, தெரசா பல்கலை உறுதியளித்தது.
மொத்தம் உள்ள, 25 பாடங்களில், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய, ஐந்து பாடங்களுக்கும், அந்தந்த மொழிகளில் நடக்க உள்ளது. பொது தாள், வணிகவியல், பொருளியல், கல்வியியல், புவியியல், வரலாறு, மனையியல், ஊடகவியல், சட்டம், மேலாண்மை, அரசியல் அறிவியல், மனோதத்துவவியல், சமூகவியல், சமூகப்பணி ஆகிய பாடங்களுக்கு மட்டும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வேதி அறிவியல், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், வாழ்க்கை அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், புவி அமைப்பியல், கடல் மற்றும் கோளரங்க அறிவியல் போன்ற பாடங்களுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடக்க உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...