சமீப காலமாக, பள்ளி மாணவர்களே கழிவறையை சுத்தம் செய்யும் நிலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடலூரில் பள்ளி மாணவர்களையே கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், வெய்யலூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சிதம்பரத்தைச் சேர்ந்த அம்பேத்கார் பணியாற்றி வருகிறார். அவரோடு மேலும் 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் என சிலரை மட்டும் கழிவறையை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, மாணவர்களும் கழிவறையை சுத்தம் செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
பின்னர், இந்த தகவல், கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி, சிதம்பரம் ஆர்.டி.ஓ. விஜயலட்சுமி, கடலூர் மாவட்ட கல்வி அதிகாரி பாலமுரளி ஆகியோர் வெய்யலூர் அரசுப் பள்ளிக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக் கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்வதால் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கிராமங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மாணவர்களே வகுப்பறைகளை சுத்தம் செய்கின்றனர். அவர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் கழிவறை வசதியும் இல்லாததால், அவர்களே இதுபோன்ற பணிகளைச் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம், களக்காடு அருகே பள்ளிக் கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்தியதாக வந்த புகாரைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகி, ஆசிரியர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...