ஏர்செல் நிறுவனத்தின் முன்னணி பங்குதாரரான அனந்த கிருஷ்ணன் ஏர்செல் -
மேக்சிஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகாததால், ஏர்செல் - ரிலையன்ஸ்
இணைவு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவின் முன்னணி நெட்வொர்க் நிறுவனங்களான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ஏர்செல் நிறுவனங்கள் இணைய முடிவுசெய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கான ஒப்பந்தமும் தயார் செய்யப்பட்டது. இந்த இணைப்பின் மூலம், 19 கோடி வாடிக்கையாளர்களுடன் உருவாகும் புதிய நெட்வொர்க் நிறுவனமானது இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகத் திகழும். முதலிடத்தில் ஏர்டெல் (25 கோடி வாடிக்கையாளர்கள்), இரண்டாவது இடத்தில் வோடஃபோன் (19.8 கோடி வாடிக்கையாளர்கள்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இந்நிலையில், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்செல் நிறுவனத்துடன் இணைவது சிரமமாகியுள்ளது. ஏர்செல் மீதான தொடர் வழக்குகளால் ஏர்செல் நிறுவனத்தை ரிலையன்ஸ் கைப்பற்றும் ஒப்பந்தம் தடைபட்டுள்ளது. ஏர்செல் -மேக்சிஸ் முறைகேடு வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை வழக்கில் தொடர்புடைய சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் மத்திய அமைச்சரும் கலாநிதியின் சகோதரருமான தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்தார். இதனைத் தொடர்ந்து ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதாரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், மேக்சிஸ் நிறுவனத் தலைவரும், மலேசிய தொழிலதிபருமான டி.அனந்த கிருஷ்ணன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் 6ஆம் தேதி நடந்த விசாரணையில் ஆனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 2ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால், அனந்த கிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தின் முன்பு ஆஜராகாததால், அவர் பங்குதாரராக உள்ள ஏர்செல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர், “இதுபோல மோசடி செய்துவிட்டு நீதிமன்ற சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல் இருப்பது முறையல்ல. அனந்த கிருஷ்ணனும், மேக்சிஸ் பிரதிநிதிகளும் முறைப்படி இந்திய நீதிமன்றங்களில் ஆஜராகி உரிய பதிலளிக்காவிட்டால் ஏர்செல் நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை ஏலத்தில் விற்பனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார். அதோடு, ஏர்செல் - ரிலையன்ஸ் இணைவுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏர்செல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத் தலைவர் அம்பானிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த ஏர்செல் - ரிலையன்ஸ் இணைவு கேள்விக்குறியாகியுள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தை மிரட்டி அதன் அதிகப்படியான பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதோடு, இந்த விவகாரத்தில் சுமார் ரூ.742 கோடி மதிப்புள்ள லஞ்சம் கைமாறியுள்ளதாக கூறப்படும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...