மாணவர்கள்
எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன. தேர்வு காலங்களில் மாணவர்கள் தங்களை
எப்படி, தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து, நிபுணர்கள்
அளிக்கும் பயனுள்ள ஆலோசனைகள் இதில் இடம் பெறுகின்றன.
மாணவர்கள் உடல், மன ரீதியாக எந்தவித பாதிப்பும் இன்றி படிப்பது குறித்து ஆலோசனை அளிக்கிறார் மதுரை டாக்டர் முருகன் ஜெயராமன்.தேர்வுகள், காலத்தின் கட்டாயமாகி விட்டது. அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டு தயாராவதே சிறந்தது. தேர்வினை வாழ்வா, சாவா நிலையாக எடுத்துக்கொள்ளாமல் மன அழுத்தம், அச்சமின்றி கையாண்டால் வெற்றி நிச்சயம். தேர்வு கால 'டென்ஷன்', குழந்தைகளுக்கு கோபம், உடல் படபடப்பு, ஆர்வமின்மை, துாக்கமின்மை, செரிமான பிரச்னைகளாக வெளிப்படுகிறது.
அவர்களை அரவணைத்து, தேவையான உதவிகளை செய்வது பெற்றோர் கைகளில் உள்ளது.
தேர்வு என்பது வாழ்க்கையில் ஓர் அங்கம்தானே தவிர, அதுவே வாழ்க்கையாகி விடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்; பெற்றோர் புரிய வைக்க வேண்டும்.மாணவர்களின் உணவுபழக்க முறைகளில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். சாப்பிடாமல் படிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். தொடர்ந்து 12 மணி நேரம் உடலுக்கு தேவையான உணவு கிடைக்காத போது, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது.இதனால் படிப்பில் கவனக்குறைவு ஏற்படுகிறது. படித்ததெல்லாம் மறந்து விடும் நிலை ஏற்படுகிறது.அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது துாக்கம் ஏற்படுகிறது. இதனால், மிதமான அளவு உணவை எடுத்துக் கொள்வது நல்லது.
என்னென்ன சாப்பிடுவதுஉணவில் பழம், காய்கறி, கீரை வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். திரவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பொரித்த மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். இவற்றால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதுடன், செரிமானமும் பாதிக்கப்படும்.
மதியம் அரைமணி நேரம் வரை துாங்குவது நல்லது. இரவில் 6 - 8 மணி நேர துாக்கம் அவசியம். துாங்காமல் இருப்பதால் தேர்வில் கவனம் செலுத்த முடியாது.
விளையாட்டும் அவசியம்
எந்நேரமும் குழந்தைகளை படிக்குமாறு பெற்றோர் வற்புறுத்தக்கூடாது. இடையிடையே விளையாட்டு, யோகா, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்வதால், நுரையீரல் செயல்பாடு மேம்பட்டு, இருதய ரத்த ஓட்டம் சீராகும். இவை காபி, டீ போன்றவற்றை விட அதிக புத்துணர்ச்சி தரும். இதனால் படிப்பில் அதிக கவனம் ஏற்படுகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.
கால அட்டவணை ஏற்படுத்தி படிப்பதால் மன அழுத்தம் தவிர்க்கப்படும். சொல்லிக் கொடுப்பதன் மூலம் படித்தல், எழுதி வைத்து படித்தல், குறிப்பு எடுத்து படித்தல் போன்ற முறைகளை பின்பற்றலாம். வெவ்வேறு இடங்களில் அமர்ந்து படிப்பது நல்லது. இதனால், படித்த பாடங்களை எளிதில் நினைவுகூர முடியும்.
குழந்தைகளை பள்ளி மற்றும் டியூஷனுக்கு அனுப்புவதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக பெற்றோர் கருதாமல், அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும்.
அவர்களின் அச்சத்தை போக்கி தன்னம்பிக்கை ஊட்ட வேண்டும். மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தைகளை ஒப்பிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவம் கொண்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
குடும்பச்சூழல் குழந்தையின் படிப்பை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெற்றோர், மாணவர்களிடையே மதிப்பெண் குறித்த அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாம். இதனால், தேர்வுக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...