Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?

        தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது.
       கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.


அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.

இதில், கல்விக் கட்டணம் என்பதை அரசே வரையறுத்துள்ளது. அதாவது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும், தனியார் சுயநிதித் தொழிற்கல்லூரிகளில் கட்டண நிர்ணயத்துக்காக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணத்தையும், பல்கலைக்கழகங்கள் நடத்தும் பாடப் பிரிவுகளுக்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் இது குறிக்கும். உதாரணத்திற்கு, சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கான ஆண்டுக் கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் என்றால் கல்விக் கட்டணமான ரூ.1.25 லட்சத்தை அரசே செலுத்தும். மீதித் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டும்.

அதேபோல ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை உண்டு. மேலும், கடந்த ஜனவரி மாதம் இந்தச் சலுகையை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம்.

*இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி..*

கடந்த காலங்களில் இந்தச் சான்றிதழ் பெற பெற்றோரையும், மாணவர்களையும் அலைய விட்டதாக புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனால், கடந்த வருடம் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கொடுப்பதற்கு முன்பே மாணவர்களை முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது அண்ணா பல்கலைக்கழகம். இருந்தும், இந்தச் சான்றிதழைப் பெற நடையாய் நடக்கிறார்கள் மாணவர்கள்.

.
*யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்?*

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழிற்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களின் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கின்றன. அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஆனால், பெரும்பாலும் இந்தச் சான்றிதழ் எந்தப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்கிறோமோ அந்தப் படிப்பின் விண்ணப்பத்துடனே தரப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற தாசில்தாருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

*விண்ணப்பம் எப்படியிருக்கும்?...*

விண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர் அவர்கள் கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது.

நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும். விண்ணப்பத்துடன் இணைக்க

*வேண்டியவை என்னென்ன?*

தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம்.

*எத்தனை நாட்களில் கிடைக்கும்?*

ஏழு நாட்களில் கிடைத்துவிடும் என்கிறது தாலுகா அலுவலக வட்டாரம்.

*தாமதமானால்?*

ஒருவேளை இதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அந்த மாணவன் அடுத்தகட்டமாக மாவட்ட வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட ஆட்சியரை அணுகலாம்.

*தவறான தகவல் தந்தால்?*

ஒருவேளை மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதேபோல் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மூன்று மடங்காக கணக்கிட்டு அவரிடமிருந்தோ அல்லது அவர் பெற்றோரிடமிருந்தோ பணம் வசூலிக்கப்படும். மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.




1 Comments:

  1. Inter caste marriage certificate பெறுவது எப்படி?.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive