பணமதிப்பழிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய உயர்மதிப்பு நோட்டுகளில்,
ரூ.2.5 லட்சத்துக்கு மேல் எவ்வளவு வங்கிக் கணக்குகளில் இந்நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்ற விவரம் தன்னிடம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதியில் மத்திய அரசு அறிவித்தது. மதிப்பிழந்த இந்நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு காலக்கெடுவும் (டிசம்பர் 30) நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எனவே மக்கள் தங்களிடமிருந்த இந்நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்பவர்களின் வருவாய் விவரம் மற்றும் டெபாசிட் விவரங்கள் கண்காணிக்கப்பட்டு அதிக முறைகேடு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதம் விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
வங்கிக் கணக்குகளில் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்ட விவரம் குறித்தும், டெபாசிட் செய்தவர்கள் குறித்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கியிடம் விவரம் கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை விண்ணப்பித்திருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சந்திரசேகர் கூறுகையில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நான் விடுத்திருந்த கோரிக்கைக்கு, எவ்வளவு வங்கிக் கணக்குகளில் மதிப்பிழந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்யப்பட்டது என்ற விவரம் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று பதிலளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...