உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதைக்
கண்டித்து, நாகலாந்தில் பயங்கர கலவரம் வெடித்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு
தீ வைக்கப்பட்டதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு நாகலாந்தைச் சேர்ந்த பழங்குடி அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலத்தின் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், துணை கமிஷனர் அலுவலகம் ஆகியவை சூறையாடப்பட்டன. கோகிமா மாநகராட்சி கட்டடம், மண்டல போக்குவரத்து அலுவலகம், கலால் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெலியாங் வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ஆயுதம் ஏந்திய சிலர் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட்டபோது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் இரண்டு பழங்குடியினர் உயிரிழந்தனர். இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கும்படி கோரிக்கை எழுந்தது. ஆனால் 12 நகரங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் வன்முறை அதிகரித்தது.
அதையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 5 குழுக்களாக 375 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கோகிமா மற்றும் திம்பூர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் அங்கு வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இடஒதுக்கீடு அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் சேலியங் மற்றும் அவரது அமைச்சரவை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...