570 பக்க தீர்ப்பில் நீதிபதி பினாய்கி சந்திர கோஷூக்கு 563 பக்கங்கள், ஏழு பக்கங்கள் மட்டுமே நீதிபதி அமிதவ் ராய்க்கு.
தமிழக காவல்துறையின் நேர்மையான ஒரு சில விசாரணை அதிகாரிகள், தி மு க வழக்கறிஞர்கள் சிலர், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா என பலர் இவ்வழக்கை நகர்த்துவதில் பங்கெடுத்திருந்தாலும்,கதாநாயகன் விசாரணை நீதிபதி குன்ஹாதான் !
தீர்ப்பின் 529 ஆவது பத்தியில்
'Trial court was meticulous, sensitive, vigilant and judicious'
என்ற பாராட்டுகளை ஒரு விசாரணை நீதிபதி உச்ச நீதிமன்றத்திடம் பெறுவது அதிசயம்தான்.
அதே சொற்களை இப்படி எடுத்து கொள்ள முடியும்.
'உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு,
நுட்பமற்ற, உணர்வற்ற,
கண்காணிக்காத, நியாயமற்ற தீர்ப்பு எனக்கொள்ளலாம்.'
தமிழகத்தின் ஜனநாயக காவலர்களான
தா.பாண்டியன்,
வைக்கோ, திருநாவுக்கரசு,
திருமாவளவன்,
சுப்பிரமணிய சாமி உள்ளிட்டோர் அவசியம் படிக்க வேண்டிய தீர்ப்பு.
நாட்டைச் சீரழிக்கும்
ஊழலுக்கு எதிரான பேரியக்கத்தில் ஒவ்வொரு குடிமகனும் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என அறைகூவல் விடுக்கும் அமிதவ் ராயின் ஏழு பக்க தீர்ப்பு ஒரு கவிதை.
'Corruption gnawing into the frame and fabric of nations essence'
முதல் குற்றவாளி செல்வி ஜெயலலிதாவின் சதியே குற்றத்திற்கு காரணம் என விளக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குற்றவியல் சட்டத்திருத்தம் 1944 இன்படி நீதிபதி குன்ஹா ஆறு நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் தங்க வைர நகைகளை பறிமுதல் செய்த உத்தரவு சரியே என்று சொல்லியதோடு உடனடியாக (forthwith)விசாரணை நீதிமன்றத்தில் குற்றவாளிகளை சரணடைய சொல்லியுள்ளனர்.
எனவே நாளை காலை திருமிகு சசிகலா, திருமிகு இளவரசி, திருமிகு சுதாகரன் ஆகியோர் கரநாடக விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து தண்டனை குற்றவாளிகளுக்கான உடையணிந்து சிறையில் ஊதுபத்தி செய்தல் போன்ற வேலைகளையும் சிறை சென்ற
நாள் முதல் செய்தாக வேண்டும்.
டான்சி வழக்கில் செல்வி ஜெயலலிதாவை மனசாட்சிப்படி நடக்கச் சொன்ன உச்ச நீதிமன்றம் இன்று அதுபோன்ற தவறை செய்யவில்லை.
2016 ஜூன் மாதம் வாதங்களைக்கேட்டு தீர்ப்புக்காக ஒத்தி வைத்த பிறகு ஒன்பது மாதங்கள் தீர்ப்பு வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.
எனினும் இத்தீர்ப்பின்மூலம் உச்ச நீதிமன்றம் தன்னை ஓரளவிற்கு காப்பாற்றியுள்ளது என்பதே உண்மை.
வழக்கறிஞர் லஜபதிராய்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...