காஞ்சிபுரம்
மாவட்டத்தில், மத்திய அரசின், 'புங்கர் பீமா யோஜனா' திட்டத்தில்,
நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை, மூன்றாண்டுகளாக நிலுவையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு சேர வேண்டிய இந்த உதவித்தொகையில், முறைகேடு நடந்திருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகமும் எழுந்துள்ளது.நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், மத்திய அரசின், 'புங்கர் பீமா யோஜனா' திட்டம், நீண்ட ஆண்டுகளாகவே, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெறும் நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகை, மூன்று ஆண்டுகளாக கிடைக்க பெறாமல் இருப்பதாக, தற்போது புகார் எழுந்துள்ளது.'புங்கர் பீமா யோஜனா' திட்டம், தனியார் நெசவாளர்களும், கூட்டுறவு சங்கங்களில் பணி செய்யும் நெசவாளர்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தில் சேரும் நெசவாளர்களுக்கு, முதற்கட்டமாக காப்பீடு செய்யப்படுகிறது. இந்த காப்பீடுக்கான கட்டணமாக, 110 ரூபாய், அரசு சார்பில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், நெசவாளர்களின் பிள்ளைகளுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, 1,200 ரூபாய் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த, 1,200 ரூபாய், இரு தவணையாக, 600 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, தனியார் மற்றும் கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு, 'புங்கர் பீமா யோஜனா' திட்டத்தில் விண்ணப்பம் செய்து, மூன்று ஆண்டுகளாகியும் எந்த உதவித்தொகையும் கிடைக்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. கடந்த, 2013ல், தங்களின் பிள்ளைகள் பள்ளியில் படிக்கும் போது விண்ணப்பம் செய்து, தற்போது தங்களின் பிள்ளைகள் கல்லுாரி சென்ற போதும், மூன்றாண்டுகளுக்கான உதவித்தொகை கிடைக்கவில்லை என, நெசவாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் நெசவாளர்கள், தனியாரிடம் பணி செய்யும் நெசவாளர்கள் என, 3,500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள், தங்களின் பிள்ளைகளுக்கு, கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து, இன்று வரை உதவித்தொகை கிடைக்காமல் புலம்பி வருகின்றனர்.பொருளாதார நிலையில் பின்தங்கிய நெசவாளர்கள் பிள்ளைகளுக்கு, இந்த கல்வி உதவித்தொகை கிடைக்காததால், சிலர் கடன் வாங்கி, பிள்ளைகளுக்கு செலவு செய்துள்ளனர். நிலுவையில் உள்ள உதவித்தொகை குறித்து, அரசு அதிகாரிகளும், கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும், எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை எனவும், நெசவாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வீரசிவாஜி பட்டு கைத்தறி நெசவாளர் சங்கத்தின் பொதுச் செயலர் பலராமன் கூறுகையில், ''காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 3,600 நெசவாளர்களுக்கு கல்வி உதவித்தொகையான, 1,200 ரூபாய் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. ''இந்த பணம் மூன்றாண்டுகளுக்கு கணக்கிட்டால், பல லட்சம் ரூபாய், நெசவாளர்களுக்கு போய் சேராமல் உள்ளது. இதில் முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என, சந்தேகம் எழுகிறது. கைத்தறி துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கண்கூடாக தெரிகிறது,'' என்றார்.
என்னுடைய மகனுக்கு, 'புங்கர் பீமா யோஜனா' திட்டத்தில், கல்வி உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தோம். இதுவரை கிடைக்கவில்லை. என் மகன் கல்லுாரிக்கு சென்று, தற்போது மூன்றாம் ஆண்டு பயில்கிறான். தற்போது கூட, உதவித்தொகை கிடைக்கவில்லை. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விடுபட்ட உதவித்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.பாபு, சின்ன காஞ்சிபுரம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் நெசவு செய்து வருகிறோம். எங்கள் பிள்ளைகள் படிக்கும் போது, விண்ணப்பித்த கல்வி உதவித்தொகை கூட முறையாக கிடைக்கவில்லை. மூன்றாண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். முறையாக கல்வி உதவித்தொகை வழங்கியிருந்தால், பயனாக இருந்திருக்கும்.கே.கீதா,சின்ன காஞ்சிபுரம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...