தொண்டை வலியுடன், காய்ச்சல் இருந்தால்,
உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்து கொள்ளுமாறு
மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
பன்றி காய்ச்சல் கிருமி, காற்றில் பரவும் என்பதால், காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி மற்றும் உடல்சோர்வு இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பன்றி காய்ச்சல் நோய், "இன்ஃபுளுயன்சா' என்ற வைரஸ் கிருமியால், காற்றின் மூலம் பரவுகிறது.
கிருமி தொற்றுள்ள நபருக்கு இருமல், தும்மல் ஏற்படும் போது, மற்றவர்களுக்கு பரவுகிறது.அதிப்படியான காய்ச்சல், தலைவலி, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, தொண்டையில் கரகரப்பு, எரிச்சல், புண், தசைகளில் வலி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் மற்றும் மூச்சு இளைத்தல் ஆகிய அறிகுறிகள் இருந்தால், பன்றிக் காய்ச்சலாக இருக்க வாய்ப்புள்ளது.
உடல் ஆரோக்கியம் உள்ளவர்களுக்கு, பன்றி காய்ச்சல் வந்தாலும் கூட, சாதாரண சளி, காய்ச்சல் போல், மூன்று நாட்களில் தாமாகவே குணமாகிவிடும். கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள், உடல் பருமனாக இருப்பவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் நோய், இருதய நோய் உள்ளவர்களுக்கு, குளிர் காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
தேவையின்றி மூக்கு, வாய், கண் அருகே கைகளை கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது, "கர்ச்சீப்' மூலமாக மூக்கு, வாயை மூட வேண்டும்.பன்றிக் காய்ச்சலால் மக்கள் பீதியடையாமல் இருக்க வேண்டும்; சாதாரண வலி, காய்ச்சல் இருந்தாலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மருத்துவரை அணுகி, பரிசோதிக்க வேண்டும். நோயாளியின் உடைகள், போர்வைகளை துவைத்து, 5 சதவீத "லைசால்' நீரில் நனைத்து, வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும்.
உடனிருப்பவர்களும், டாக்டர்களை கேட்டு, "டேமிபுளு' மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று வந்த பிறகு, காய்ச்சல், இருமல், வாந்தி, சளி, தொண்டைவலி, மூச்சுத்திணறல் இருந்தால், உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், ஆய்வுக்கூட அரங்கம், சினிமா தியேட்டர், திருமண மண்டபங்கள் என, பொதுமக்கள் கூடுமிடங்களில், "லைசால்' கரைசலால் சுத்தம் செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...