தமிழகம் முழுவதும் விவசாய நிலங்கள் எல்லாம் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக
மாற்றப்படுகிறது என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
விளைநிலங்களை மனைகள் ஆக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும்
சுற்றுப்புறச் சூழலியலாளர்களால் வலுப்பெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில்
சில மாதங்களுக்குமுன்பு விவசாய
விளைநிலங்களும், விவசாயமும் அழிந்துவருவதாக முறையற்ற முறையில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை பதிவு செய்யக் கூடாது என்றும் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர், 3 ஆண்டுகளுக்குமேல் விளையாமல் தரிசாகப் போடப்பட்டுள்ள விளைநிலங்களை குடியிருப்பு பகுதிகளாகவோ அல்லது பிற உபயோகத்திற்காகவோ மாற்றுவதற்கு எந்த விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் 5 சதவீத இடத்துக்கு மட்டும் அனுமதி கோரிவிட்டு, எஞ்சிய 95 சதவீத இடம், முறைகேடாக வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. சென்னையில் 80 சதவீதமாக இருந்த விளைநிலப் பகுதி இப்போது 15 சதவீதமாக சுருங்கிவிட்டதாக செய்திகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விளைநிலங்களை வீட்டு மனைகளாக “லே-அவுட்’ போட்டு அங்கீகாரமில்லாமல் விற்பனை செய்யும்போது அந்த நிலத்தையோ அல்லது அதில் உள்ள கட்டடத்தையோ பத்திரப் பதிவுத் துறையினர் எந்தவித காரணம் கொண்டும் பதிவு செய்யக்கூடாது.
இதன்மூலம் விளைநிலங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாறுவது தடுக்கப்படும். அத்துடன் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வெள்ள பாதிப்பைத் தடுக்கவும் இது உபயோகமாக இருக்கும் என்று கூறி, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு ஒரு அரசாணையை தாக்கல் செய்தது. அதில், ‘அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம். ஆனால், இனிவரும் காலங்களில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக சட்டவிரோதமாக மாற்றுவதற்கும், அந்த சட்டவிரோத நிலங்களை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.
அரசின் இந்த முடிவை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர், அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் உள்ளன. இந்த வீட்டு மனைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்தி வரையறை செய்யப் போகிறீர்கள்? இதற்கான அரசின் திட்டம் என்ன? எதிர்காலத்தில் சட்டவிரோத வீட்டுமனைகள் உருவாக்கப்படாமல் தடுப்பது எப்படி? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு உருவாக்கி, அதை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
ஆனால் இந்த ஒருங்கிணைந்த திட்டத்தை தமிழக அரசு இதுவரை உருவாக்கவில்லை. இந்தத் திட்டத்தை உருவாக்க கால அவகாசம் வேண்டும் என்று ஒவ்வொருமுறையும் வழக்கு விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான சஞ்சய்கிஷன் கவுல், சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக மாற்றலாகிச் சென்றுவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாத்துரை, மனுதாரர் யானை ராஜேந்திரன் உட்பட பலர் ஆஜராகினார்கள். அப்போது, ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையாக தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.
அப்போது, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், ‘கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து தமிழகத்தில் 3வது முதலமைச்சர் வந்துவிட்டார். ஆனால் இதுவரை ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்காமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகளையும் நிலத்தையும் விற்பனை செய்ய முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். அதேநேரம், இந்த ஐகோர்ட் தடையை அகற்றவும் இல்லை. தமிழக அரசு திட்டத்தை உருவாக்கவும் இல்லை’ என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், ‘இந்தப் பிரச்னைக்கு இன்றே முடிவு கட்டலாம். அரசு நிலை குறித்து விளக்கம் கேட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்கலாம்’ என்று கருத்துக் கூறினார்.
மேலும் நாடு முழுவதும் நகரமயமாக்கல் என்பது விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதேநேரம் வீட்டு மனைகள், அந்த மனைகள் உள்ள சாலைகள் எல்லாம் விதிமுறைப்படி உருவாக்க வேண்டும். சாலைகள் எல்லாம் குறுகியதாகவும், விதிமுறைகளை மீறியும் இருந்தால் என்ன செய்வது?’ என்று நீதிபதி கருத்து கூறினார்.
அப்போது நடந்த வாதத்தின்போது, நீதிபதி மகாதேவன், ‘தமிழக அரசு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டும். அந்தத் திட்டத்தை உயர்நீதிமன்றம் பரிசீலித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்கும். அதுவரை, பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல், ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘தமிழக அரசு 4 வாரத்துக்குள் ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்கி அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை, ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவையும் நீட்டிக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...