ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, தனக்கு எதிராக
தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கிலிருந்து தன்னைப் பாதுகாக்க
உச்சநீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்கிறார்.
முன்னாள் நீதிபதி கே.எஸ்.பணிக்கர் ராதாகிருஷ்ணன், 2015ஆம் ஆண்டு ஓய்வுபெற்று சில மாதங்களுக்குப்பின், பீட்டா அமைப்பு அவருக்கு ‘மேன் ஆஃப் தி இயர்’ எனும் விருதை வழங்கியது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்தவேளையில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், இதற்கு எதிராக பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். 2014ஆம் ஆண்டு, விலங்கு நல ஆணையம், பீட்டா மற்றும் பிற அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார். இவ்வேளையில், அவர் பீட்டாவின் ‘மேன் ஆஃப் தி இயர்’ விருதை வாங்கியிருப்பது அரசியலமைப்பு துர்பிரயோகம் என பொதுநல வழக்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
‘தீர்ப்பு சாதகமாக அமையவேண்டி ஒரு தரப்பினர் அளிக்கும் கொடைகளை, உதவிகளை பெற்றுக்கொள்ள பார் நீதிபதிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி செய்துவிட்டார் நீதிபதி ராதாகிருஷ்ணன்; இது அரசியலமைப்பு துர்பிரயோகம்’ என்கிறார் வழக்குத் தொடுத்த விவசாயி சாலை சக்கிரபாணி. எனவே, அந்த விருதை திருப்பிக் கொடுக்கும்படி அறிவுறுத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார். இது தொடர்பாக முன்னாள் நீதிபதிக்கு ஜனவரி 31ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்துக்கு விரைந்த முன்னாள் நீதிபதி, 1985ஆம் ஆண்டின் நீதிபதிகள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு மூன்றின்கீழ் தன்னை பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கிறார். தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேக்கர், நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் டி வொய் சந்திராசூட் ஆகிய நீதிபதிகள் அமர்வின் முன் இந்த மனுவை விசாரணைக்கு வழங்கினார் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா. இந்த மனு திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...