ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என, வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநில வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்கிரமராஜா இன்று கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘வருகிற மார்ச் 1ஆம் தேதி முதல் பெப்சி, கோக் போன்ற குளிர்பான விற்பனை மாநிலம் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. வணிகர்கள் விற்பனை செய்வது நிறுத்தப்படுகிறது. இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் கருத்து கோரப்படும். மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. சென்னை சரவண பவன் ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லை எனக்கூறி மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஓட்டல்களுக்கு சீல் வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும் குப்பைகளை நாங்களே தரம் பிரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
சிறு வணிகர்களின் நலன் காக்க ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்த்து வருகிறது. இதே நிலை நீடித்தால் ஜி.எஸ்.டி. உணவு பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த ஒத்துழைப்புத் தர பரிசீலிக்க வேண்டிவரும் என வணிகர் சங்க பேரவை எச்சரிக்கிறது. வருகிற 7ஆம் தேதி முதல் மும்பையில் நடைபெறவுள்ள அகில இந்திய வணிகர் சம்மேளன கூட்டத்தில் அனைத்து பிரச்னைகளும் முன்வைக்கப்படும்.
கிருஷ்ணகிரி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரெயில் பாதை வசதியை உடனடியாக செய்து தர வேண்டும். கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ரியல் எஸ்டேட் பிரச்னையில் அரசு தெளிவான முடிவு எடுக்க வேண்டும். மேலும் டோல்கேட் கட்டணத்தை வரைமுறைப்படுத்த வேண்டும். வருகிற மே மாதம் 5ஆம் தேதி விழுப்புரத்தில் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதில் அனைத்து பிரச்னைகளையும் முன்னிறுத்தி தீர்வு காணப்படும்’ என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...