சட்டமன்றத்தில் 122 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவுடன் தனது பலத்தை
நிரூபித்துவிட்டார் முதல்வர் பழனிச்சாமி. எதிர்க்கட்சி உறுப்பினர்களை,
காவலர்களை வைத்து அடித்து, உதைத்து பேரவையிலிருந்து வெளியே தூக்கி
வீசிவிட்டு, முதல்வர் நாற்காலியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் பழனிச்சாமி.
இன்று ஆளுநரைச் சந்தித்து பேரவையில் தனது
பெரும்பான்மையை நிரூபித்த கடிதத்தை முதல்வர் கொடுக்கப் போகிறார். காலையிலிருந்து பேரவையில் நிகழ்ந்த அமளி துமளி, எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு மத்தியில் பழனிச்சாமி கொடுக்கப்போகும் கடிதத்தை ஆளுநர் ஏற்பாரா? அல்லது மீண்டும் ஒருமுறை பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவாரா இப்படி, பல கேள்விகள் இந்த நேரத்தில் எழுகின்றன. நாம் பல்வேறு மூத்த ஆலோசகர்களுடன் இது தொடர்பாக பேசினோம். அவர்கள் சொன்ன தகவல்களை தொகுத்து இங்கே கொடுத்திருக்கிறோம்.
‘122 உறுப்பினர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கிறது. ஒருவேளை, திமுக உறுப்பினர்கள் அனைவரும் உள்ளேயிருந்து வாக்களித்திருந்தாலும், பழனிச்சாமி அரசுக்கு எந்த பாதிப்பும் வந்திருக்காது. பழனிச்சாமி அரசு இப்போது செய்யவேண்டியது, தங்கள் பலத்தை நிரூபிப்பதுதான். அதை அவர்கள் செய்துவிட்டார்கள். எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தியது என்பது தனி டிராக். அதற்கு தனியாக விசாரணை நடத்திக் கொள்ளலாம். கவர்னர் அந்த விசாரணைக்கு வேண்டுமானாலும் உத்தரவிடலாம். சட்டமன்றத்திலிருந்து திமுக வெளிநடப்பு செய்திருந்தால், இந்த விவகாரத்தில் அவர்கள் நீதிமன்றத்துக்குப் போக முடியாது. ஆனால் அவர்கள் குண்டுக்கட்டாக பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதனால், அவர்கள் நீதிமன்றத்துக்குப் போகலாம். வழக்கும் தொடரலாம். ஆனாலும் நீதிமன்றமும்கூட பேரவைக்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதற்காக தாக்கப்பட்டார்கள், எதற்காக வெளியேற்றப்பட்டார்கள் என்பது பற்றிதான் விசாரிக்கும். பழனிச்சாமி அரசு தங்கள் பலத்தை நிரூபித்ததை செல்லாது என அறிவிக்க முடியாது. பேரவைக்குள் நடந்த விவகாரம் என்பதால், முடிவெடுக்கும் முழு அதிகாரம் சபாநாயகருக்குத்தான் உண்டு. எனவே, நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் சபாநாயகருக்கு எதிராக தீர்ப்பு வழங்கவோ, முடிவெடுக்கவோ வாய்ப்பு இல்லை. ஆக, பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்தச் சிக்கலும் இப்போது இல்லை. கவர்னரும் முதல்வர் பழனிச்சாமி கொடுக்கப்போகும் கடித்தை ஏற்று அவர் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்பட அனுமதிப்பார்’ என்று சொன்னார்கள்.
ஆக, பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு இப்போதைக்கு எந்தச் சிக்கலும் ஆளுநரால் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...