தமிழக
கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) 'ரெகுலர்'
மற்றும் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சி.இ.ஒ.,க்கள் என
இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிப்பதால் பொதுத் தேர்வு துவங்க உள்ள நிலையில்
அவர்கள் பணி பெரும் சவாலாக மாறியுள்ளது.
மாநிலத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்டத்தை
கவனித்த, கூடுதல் சி.இ.ஓ.,க்கள், பணியிடமாற்றம் அல்லது ஓய்வு பெற்ற பின்
இரண்டு ஆண்டுகளாக அப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மாறாக, அந்தந்த மாவட்ட சி.இ.ஓ.,க்கள் எஸ்.எஸ்.ஏ.,வையும் கூடுதலாக கவனிக்கின்றனர். இரு பெரும் பொறுப்புக்களால், பணிச்சுமை அதிகரிப்பதாக சி.இ.ஓ.,க்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., டி.ஆர்.பி., எஸ்.சி.இ.ஆர்.டி., என கல்வித்துறையில் உள்ள ஏராளமான பிரிவுகளின் இயக்குனர்கள் உட்பட உயர் அதிகாரிகள், சென்னையில் நடத்தும் சாதாரண கூட்டங்களுக்கு கூட, சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஒ.,க்களை பங்கேற்க வேண்டும் என உத்தரவிடுகின்றனர். இதனால் கல்வி அதிகாரிகளின் வழக்கமான பணிகள் தேங்குகின்றன.
தற்போது பொதுத் தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், எஸ்.எஸ்.ஏ.,வில் காலியாக உள்ள 32 மற்றும் திருச்சி சி.இ.ஓ., என 33 பணியிடங்களை உடனடியாக நிரப்ப, கல்வி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சி.இ.ஓ., வாய்ப்பு: இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால், பணிமூப்பு பட்டியலில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கனவில் காத்திருக்கும் மாவட்ட மற்றும் தொடக்க கல்வி அலுவலர்கள் 33 பேர், சி.இ.ஓ.,க்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு கிடைக்கும். மூப்பு பட்டியலில் உள்ள 80 சதவீதம் டி.இ.ஓ.,க்கள் மார்ச் மற்றும் ஏப்ரலில் ஓய்வுபெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.ஏ., திட்ட கூடுதல் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டவை. அவற்றை தொடர்ந்து காலியாக வைத்திருக்காமல், பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். பொது தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், கல்வி அதிகாரிகளின் பணிச்சுமையும் குறையும். எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ.,க்கள் நியமித்து, ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் பொறுப்புக்களை, அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கமான, கல்விப் பணிகளில் 'ரெகுலர்' சி.இ.ஓ.,க்கள் கூடுதல் கவனம் செலுத்த முடியும். மேலும், தகுதி இருந்தும் மறுக்கப்பட்டு வரும் டி.இ.ஓ.,க்களின் கனவும் நிறைவேறும். செயலாளர் சபீதா நடவடிக்கை எடுத்து சி.இ.ஓ.,க்களின் 'இரட்டை குதிரை சவாரி'க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...