இதைத்தொடர்ந்து, கர்நாடக ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி எச்.ஜி.ரமேஷ், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
சஞ்சய்கிஷன் கவுல்
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், சத்தீஷ்கார் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தீபக்குப்தா உள்பட 5 மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகளை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை ஏற்றுக்கொண்டது. பின்னர் சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவும், மத்திய சட்டத்துறையும், இந்த 5 தலைமை நீதிபதிகளையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, இந்த 5 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
பத்திரப்பதிவுக்கு தடை
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு இன்று (வியாழக்கிழமை) பிரிவு உபசார விழா நடத்தப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக கடந்த 2014–ம் ஆண்டு ஜூலை 26–ந் தேதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி ஏற்றார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இப்பதவியை அவர் வகித்துள்ளார். இவரது பதவி காலத்தில், சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் பாதுகாப்பு வழங்கும் பணியை மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேபோல, இவர் தலைமையிலான முதன்மை அமர்வு தான், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடைவிதித்தும், சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிகளில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட்டது.
நிதி நெருக்கடியா?
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பல உத்தரவுகளை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பிறப்பித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இவர் எடுத்த அதிரடி நடவடிக்கையால், வக்கீல்களின் தேவையற்ற போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவுகளை அமல்படுத்தாமலும், வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யாமலும் இழுத்து அடிக்கும் அரசு துறை செயலாளர்கள் பலரை நேரில் ஆஜராக வைத்து, அவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, அந்த பணிகளை செய்யவும் வைத்துள்ளார்.
தமிழக நீதித்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்காமல் தமிழக அரசு அதிகாரிகள் இழுத்தடித்தபோது, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதா? என்று இவர் தெரிவித்த கருத்து, தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
புதிய தலைமை நீதிபதி
தற்போது, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கர்நாடக ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி எச்.ஜி.ரமேஷ் என்பவர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும், விரைவில் நியமன உத்தரவை பிறப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.
புதிய தலைமை நீதிபதி எச்.ஜி.ரமேஷ், 1957–ம் ஆண்டு ஜனவரி 16–ந் தேதி கர்நாடக மாநிலத்தில் பிறந்தார். 1982–ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து, அம்மாநிலத்தில் உள்ள ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார். பின்னர், 2003–ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு கூடுதல் நீதிபதியாக பதவி ஏற்ற இவர், 2005–ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்கு 3–வது மூத்த நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...