வேலூர்: மாணவன் நினைத்தால் நடத்தி காட்டுவான் என்பது பழைய திரைப்பட பாடலில்
ஒலிக்கும் வரிகள். இன்றைய இளைஞர்கள் லேப் டாப், செல்போன் என்று தகவல்
தொழில்நுட்ப சாதனங்களுடனும் வீணாக சுற்றி வரும் சாதாரணமானவர்கள் அல்ல.
அவர்கள் நினைத்தால் எதையும் அசைத்து பார்க்கும் திறன் கொண்ட
நாட்டுப்பற்றாளர்கள் என்பது தமது பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டுக்காக
சமீபத்தில் திரண்டு நடத்திய அறவழிபோராட்டம் உலகுக்கே உணர்த்தியது. இந்த
போராட்டம் ஒரு வகை என்றால், சத்தமின்றி வேலூர் அருகே சிறிய கிராமம் ஒன்றில்
பள்ளி பருவத்தே ஒன்று சேர்ந்த மாணவர் குழு ஒன்று தமது ஊரின் ஏரிகளை
சுவீகரித்து அதை சுத்தப்படுத்தி மரங்களை நட்டு தொடர்ந்து பராமரித்து
வருகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக ேவண்டும்.
வேலூர் அடுத்த இலவம்பாடி கிராமத்தை சேர்ந்த இளம்பட்டதாரி பரந்தாமன் என்பவர்
தனியொருவராக இந்த பணியில் களம் இறங்கினார். பிபிஏ முடித்து டிப்ளமோ
தாவரவியல் படித்து, மலர் செடிகள், மரக்கன்றுகள் விற்பனை செய்யும் தொழிலை
நடத்தி வரும் அவருக்கு, தமது ஊரின் இரண்டு ஏரிகள் மட்டுமின்றி மாவட்டம்
முழுவதும் உள்ள ஏரிகளும் சீமை கருவேல மரங்களால் நிரம்பி, ஆக்கிரமிப்பின்
பிடியிலும் சிக்கியிருப்பது வேதனையை தர, அதற்கு மாற்றாக எதையாவது செய்ய
வேண்டும் என்று நினைத்து உடனே செயலில் இறங்கினார். இதற்காக எந்த நிதி
ஆதாரமும், பின்புலமும் இன்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அமைப்பை
ஏற்படுத்தி அதில் தனது ஊரிலேயே பள்ளியில் படிக்கும் 30 பள்ளி மாணவர்களை
கொண்டு முதலில் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இலவம்பாடி ஏரியை புனரமைக்க
முடிவு செய்தனர்.
அதன்படி, முதலில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் முறைப்படி ஏரியை
புனரமைக்கும் முடிவுக்கு அனுமதி வேண்டினர். அவர்களும் அனுமதிக்கவே தன்னுடன்
இணைந்த பள்ளி மாணவர்களை கொண்டு சீமை கருவேல மரங்களை வேருடன் அகற்றி
உடனடியாக அவற்றை தீயிட்டு அழித்தனர். பின்னர் பொக்லைன், புல்ேடாசர் கொண்டு
ஏரிப்பரப்பை நீர்பிடிப்பு பகுதியுடன் சேர்த்து சமன் செய்து மீண்டும் சீமை
கருவேலன் வளர்ந்து விடாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து
ஆல், அரசன், புங்கன், அத்தி, கடம்பன், வேம்பு, மலைவேம்பு, வேலம் என 500
வளர்ந்த மரக்கன்றுகளை நட்டனர். நட்டதுடன், வாரம் ஒரு நாள் இவரது குழுவினர்
மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, இயற்கை உரங்களை மரங்களுக்கு இடுவது என்று
4 ஆண்டுகளுக்கும் மேல் பராமரித்து வருகின்றனர்.
அத்துடன் அந்த ஏரியின் ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் மூலம்
அகற்றியதுடன், கரைகளையும் முறையாக அமைத்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு முன்பு
பள்ளி மாணவர்களாக இருந்தவர்கள் இன்று அவருடன் கல்லூரி மாணவர்களாக வளர்ந்து
தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர். அடுத்ததாக அருகில் உள்ள 500 ஏக்கர்
பரப்பளவுள்ள பெரிய ஏரியில் முழுவதும் நிறைந்துள்ள சீமை கருவேல மரங்களை
அகற்றி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வளர்ந்த மரங்களை நட்டு பராமரிப்பதற்கான
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதற்காக அவர்கள் ஆந்திர மாநிலத்தில்
இருந்து மரங்களுக்கான ஆர்டரை பெற்றுள்ளனர். ஒரு மரம் ₹1000 முதல் ₹2,500
வரை பேசி முடித்துள்ளனர். முன்னதாக ஏரியை சுத்தப்படுத்தும் பணிக்காக
அவர்கள் பொதுப்பணித்துறை நீராதாரப்பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம்
முறையாக அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தண்ணீர் பாய்ச்சுவது, இயற்கை உரம், டிராக்டருக்கான டீசல், புல்டோசர்,
பொக்லைன் இயந்திரங்களுக்கான வாடகை என்று ஏற்படும் செலவினங்களுக்கு என்ன
செய்கிறீர்கள் என்று கேட்டோம். ஊர் மக்கள் சிலரே தண்ணீர் பாய்ச்சுவதற்கும்,
டீசல் செலவுக்கும் வழங்கி விடுகின்றனர். இதுபோக நான் தொழில் செய்வதில்
கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை இதற்காக திருப்பி விடுகிறேன்.
இதன் மூலம் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி என்கிறார் பரந்தாமன். சமீபத்தில்
ஜல்லிக்கட்டுக்காக திரண்ட இளைஞர்கள் இதுபோன்ற காரியங்களுக்கும் அவரவர்
ஊர்களில் களம் இறங்கினால், நமது நாடே பசுமையாக மாறுவதுடன், இழந்த இயற்கை
வளத்தை 60 சதவீதம் மீட்டுவிட முடியும். அதேபோல் எங்கள் காரியத்துக்கு அரசோ
தொண்டு நிறுவனங்களோ உதவினால் எங்கள் பணி இன்னும் வேகமெடுக்கும்’ என்று
கூறினார்.
வளர்ந்த மரத்தை உருவாக்கும் நவீன தொழில்நுட்பம்
வளர்ந்த மரத்தின் வைரம்பாய்ந்த கிளையை தேர்வு செய்து அந்த மரக்கிளையிலேயே
அரை அடி அளவுக்கு பட்டைகளை உரித்து எடுத்து விட்டு அதில் தேனை சுற்றிலும்
பூசி, ஒருவித ரசாயனத்தையும் அதன் மேல் பூச வேண்டும். பின்னர் அதை மூடியவாறு
சிறிய பையை உரம் மண் கலந்த கலவையுடன் ஈரமாக கட்டி விட வேண்டும். 3
மாதங்களில் அது வேர்விடும். பிறகு பெரிய 2க்கு 2 அடி என்ற கணக்கில் பெரிய
பையை கட்ட வேண்டும். நன்றாக வேர்விட்டு கோணிப்பையில் உள்ள மணல் மற்றும்
உரக்கலவையில் வேர் ஊன்றியவுடன் கிளையை வெட்டி நிழலில் ஈரப்பதத்துடன் வைக்க
வேண்டும்.
வாழ்க மாணவர்கள். வருக இன்னொரு பசுமை புரட்சி.
ReplyDeleteவாழ்க மாணவர்கள். வருக இன்னொரு பசுமை புரட்சி.
ReplyDelete