அன்றாட வாழ்வில் மூன்றாம் பாலினத்தவர் சந்திக்கும் மிக முக்கியமான
பிரச்னைகளில் ஒன்று கழிப்பறை வசதி. தங்க இடம் அளிக்காமல், வேலைவாய்ப்பு
தராமல் ஒதுக்கி வைக்கப்படுவதால், பாலியல் தொழிலுக்கும், பிச்சை எடுக்கும்
தொழிலுக்கும் அவர்கள்
தள்ளப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கென பொதுகழிப்பிடம் இல்லாததால், கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், மூன்றாம் பலினத்தவருக்காக சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ”மூன்றாம் பாலினத்தவருக்கு திரையரங்குகள், உணவகம்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தனியாக கழிப்பறை வசதி எதுவும் இல்லை. இதனால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வந்தது. அப்போது, நீதிபதிகள் , “சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது? சர்வதேச அளவில் ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டியது உள்ளது. எனவே, உயர்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக வழக்கறிஞர் ஆர்.தேவபிரசாத் என்பவரை நியமிக்கிறோம். அவர் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்” என உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...