உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை 31 ஆகும். தற்போது 23 நீதிபதிகள்தான் பணியில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் நியமனமின்றி இருந்தது. நீதிபதிகள் நியமனக் கமிஷன் விவகாரம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பரிந்துரைத்த நீதிபதிகள் பட்டியலுக்கு மத்திய அரசு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நீதிபதிகள் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கேஹர் பொறுப்பேற்ற பின்பு, அவருடன் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான காலி இடங்களை நிரப்ப முடிவு செய்து புதிய பட்டியலைத் தயார் செய்தது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் (58), ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா (61), சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் குப்தா (61), கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மோகன் எம்.சந்தனகவுடர் (58), மற்றும் கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் நஷீர் ஆகியோரின் பெயர்களை ஏற்று, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பட்டியல் மத்திய அரசு மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும். அதன்பின் ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பார்.
இவை முடிந்து நியமனத்துக்கான வாரன்ட் இன்னும் ஓரிரு வாரங்களில் வந்து விடும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த 5 புதிய நீதிபதிகள் பதவியேற்றதும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயரும். வழக்கமாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளவர்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவது வழக்கம். ஆனால், இம்முறை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்காத நீதிபதி அப்துல் நஷீருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...