பல
நாட்கள் கழித்து தமிழகம் ப்ரேக்கிங் நியூஸுக்கு ப்ரேக் விட்டிருக்கிறது.
அதே சமயம்,பல நாட்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்தமான் எரிமலையில் தற்போது
புகைய துவங்கியுள்ளது.
இந்தியா மற்றும் தெற்காசியா பகுதிகளில், உயிர்ப்புடன் இருக்கும் ஒரே ஒரு
எரிமலையான பாரன் தீவு எரிமலை, புகை மற்றும் லாவாவை வெளியேற்றத்
துவங்கியுள்ளது.
அந்தமான்
நிகோபார் தீவுகளில் இருக்கும் இந்த எரிமலையானது சுமார் 150 வருடங்களாக
செயலற்று இருந்தது. பிறகு திடீரென கடந்த 1991-ம் ஆண்டு வெடித்தது; அப்போது
புகை மற்றும் எரிமலைக் குழம்புகளை வெளியிட்டது. பிறகு 1994-95
காலகட்டத்தில் மீண்டும் வெடித்தது. அதன்பிறகு இந்த பெரியஅளவில் எரிமலையில்
சீற்றங்கள் ஏற்பட்டதில்லை. 1787-ம் ஆண்டுதான் இதன் முதல் வெடிப்பு பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 1789, 1795, 1803-04, மற்றும் 1852-ம்
ஆண்டுகளுக்குப் பின்பு 1991-ம் ஆண்டுதான் எரிமலை வெடிப்பு பதிவானது.
2005-07 காலகட்டத்திலும் இந்த எரிமலையில் சீற்றங்கள் ஏற்பட்டாலும், அது
2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் ஏற்பட்டது எனக்
கண்டறியப்பட்டது.
தற்போது மீண்டும் இந்த எரிமலையில் இருந்து புகை வெளியேறுவதாகக்
கண்டறிந்துள்ளனர் கோவாவைச் சேர்ந்த கடலியல் விஞ்ஞானிகள். இதுகுறித்துக்
கூறிய சி.எஸ்.ஐ.ஆர் மற்றும் தேசிய கடலியல் நிறுவனத்தின் விஞ்ஞானிகள்,
"இந்தியாவில் உயிருடன் இருக்கும் ஒரே எரிமலையான பாரன் தீவுகள் எரிமலை
மீண்டும் வெடித்துள்ளது. இது அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து 140
கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 150 ஆண்டுகளாக வெடிக்காத இது கடந்த
1991-ல் வெடித்தது. கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி, புகை மற்றும்
எரிமலைக்குழம்பு இரண்டையும் வெளியிட்டது" என்றனர்.
எரிமலை வெளியிடும் சாம்பல் மற்றும் புகையின் மாதிரிகளையும் விஞ்ஞானிகள்
சேமித்துள்ளனர். இதன்மூலம் எரிமலை வெடிப்பு பற்றிய தன்மையை நம்மால்
அறிந்துகொள்ள முடியும். கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி மதியம் எரிமலையில்
இருந்து வெளியேறிய மாதிரிகளை சேமித்துள்ளனர்.
மீண்டும் ஜனவரி 26-ம் தேதி அங்கே சென்று ஆராய்ந்த விஞ்ஞானிகள், அன்றும்
எரிமலையில் இருந்து புகை மற்றும் எரிமலைக் குழம்பு வெளியேறியதை
கண்டுள்ளனர். பகல் நேரத்தில் புகையை வெளியிட்ட எரிமலையானது, இரவு நேரத்தில்
லாவாவை வெளியிட்டுள்ளது.
பாரன் தீவு எரிமலையானது அந்தமான் தலைநகர் போர்ட்ப்ளேயரில் இருந்து
சுமார் 140 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்தப் பகுதியில் மனிதர்கள் யாரும்
வசிப்பதில்லை. இந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும் என்றாலும்,
போர்ட்ப்ளேயரில் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்றபின்பே செல்ல முடியும்.
அரசுக்கு அதிக வருவாய் தரும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக உள்ளது இந்தப்
பகுதி.
- ஞா.சுதாகர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...