பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பது
உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை கல்லூரி
சாலையில் உள்ள மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை (டி.பி.ஐ)
முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான ஆரம்பப்பள்ளி
ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தின்போது போலீசாருக்கும், போரட்டம் நடத்திய ஆசிரியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுதவிர, போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்துள்ள ஆசிரியர்களை, டி.பி.ஐ. செல்லும் வழியில் ஆங்காங்கே வழிமறித்து போலீஸார் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூக நலக்கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களின் வருகை தொடருவதால் நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போராட்டம் குறித்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் செ.பாலசந்தர் நம்மிடம் கூறுகையில்,"தமிழக இடைநிலை ஆசிரியர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஊதியத்தை மீண்டும் வழங்கவேண்டும். தனி பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். எட்டாவது ஊதியக் குழுவை உடனடியாக நடைமுறைத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு முரணாக அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடக்கக் கல்வி இயக்குனரின் ஆணைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும். இவைதான் எங்கள் கோரிக்கை.இவற்றை வலியுறுத்திப் பலமுறை போராடிவிட்டோம்.மனுக்கள் அனுப்பியும் விட்டோம். ஆனால் எதையும் தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனவே உடனடியாக எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரவேண்டும்" என்று தெரிவித்தார்.
- சி.தேவராஜன்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...