கடலுார் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம்
குழந்தைகளுக்கு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்க
சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.
தேசிய குடற்புழு நீக்கம் தினம்
கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை
(10ம் தேதி) குடற்புழு நீக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மண்ணின்
வழியாக பரவும் குடற்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக அல்பெண்டசோல் என்னும்
மாத்திரைகளை உட்கொள்ள செய்து இந்நோயின் பாதிப்பினை தடுப்பதே இத்திட்டத்தின்
பிரதான நோக்கமாகும்.
இம்மாத்திரைகள் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலர்களுக்கும் கொடுக்கப்பட்டு உட்கொள்ள செய்யப்படுகிறது. இதன் மூலம் இம்மாவட்டத்தில் 7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர். இந்த மாத்திரைகள் அனைத்து அரசு பள்ளி, உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அனைத்து தனியார் பள்ளிகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.மேலும் பள்ளி செல்லா குழந்தைகள், சிறுவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் சுகாதார பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.
விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாமாக வரும் 15ம் தேதி மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது. இம்மாத்திரைகள் அங்கன்வாடி மையங்கள் மூலமாகவும், 319 துணை சுகாதார நிலையங்கள், 1695 அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 463 தனியார் பள்ளிகள் மூலமாக வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இப்பணிகளில் சுகாதாரத்துறையுடன் மருத்துவத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை, கல்வித்துறை மற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட உள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...