உத்தரப்பிரதேசத்தில் ரீசார்ஜ் கடைகளிலிருந்து பெண்களின் மொபைல் நம்பர்
விற்கப்படுகிறது என்று அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்காக 1090 என்ற உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ்
யாதவ் அறிமுகம் செய்துவைத்தார். மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதையொட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப் புகார் எண் மூலம் காவல்துறையினருக்கு கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சம் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களில் 90 சதவிகிதம் பெண்களுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சில நேர்மையற்ற ரீசார்ஜ் கடை உரிமையாளர்கள் தங்களிடம் ரீசார்ஜ் செய்துக் கொள்ளும் பெண்களின் மொபைல் நம்பர்களை பதிவு செய்து வைத்து கொள்கிறார்கள். பின், பணம் கொடுக்கும் ஆண்களுக்கு அந்த மொபைல் நம்பரை விற்பனை செய்கின்றனர். அழகாக இருக்கும் பெண்களின் நம்பர்களை ரூ.500க்கும், சாதாரணமாக இருக்கும் பெண்களின் நம்பர்களை ரூ.50க்கும் விற்பனை செய்கின்றனர்.
எனவே, ரீசார்ஜ் கடைகளிலிருந்து பெண்கள் மொபைல் நம்பரை பெறும் ஆண்கள் அந்த பெண்ணின் நம்பருக்கு அழைத்து, ‘நான் உங்களிடம் நட்பு வைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி, அடிக்கடி தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து முகமது (24) என்ற இளைஞர், ‘என்னுடைய அப்பா ரீசார்ஜ் கடை வைத்துள்ளார், அவர் வெளியூர் செல்லும்போது நானும் என் நண்பர்களும் கடைக்குச் சென்று பெண்களின் மொபைல் நம்பர்களை எடுத்து அவர்களிடம் நட்பு வைத்துக் கொள்வதாக கூறி அழைப்பு விடுப்போம். சில சமயங்களில் வாட்ஸ்ஆப் மூலம் ஆபாசமாக புகைப்படங்களை அனுப்புவோம் என்று காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சீதாபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவர், 1090 என்ற உதவி எண் மூலம் புகார் அளித்துள்ளார். இதில், தனக்கு ஒரு நபர் குறிப்பிட்ட நம்பர்களில் இருந்துவிடாமல் மொபைல் மூலம் தொந்தரவு கொடுப்பதாகவும், இரவு நேரங்களில் புதிய புதிய நம்பர்களில் இருந்து அழைப்பதால் என்னுடைய கணவரின் சந்தேகத்துக்கு ஆளாகிறேன். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று குற்றங்கள் நடந்துவரும் நிலையில் இது தொடர்பாக இதுவரை யாரும் சிறையில் அடைக்கப்படவில்லை. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது: இந்த வழக்கு தொடர்பானவர்களை கைது செய்து சிறையில் அடைத்தால் சிறையில் இடமிருக்காது. எனவே அவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து அனுப்பிவைக்கப்படுவார்கள். ராஜேஷ் பிரதாப் யாதவ் என்பவர் மீது மட்டும் ஒரு நாளைக்கு 100 புகார்கள் எழுந்துள்ளது. அவர்களிடம் கேட்கப்போனால் அவள் என்னுடைய காதலி என்னுடன் பேச மறுக்கிறாள் அதனால் விடாமல் அழைப்பு விடுத்தோம் என்று கூறுகின்றனர். சிலர் தவறுதலாக நம்பர்களை டைப் செய்து விடுகிறோம் என கூறுகிறார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கறிஞர் அவிந்தேர் சிங் என்பவர் கூறியதாவது: இந்தக் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று சட்டத்தில் உள்ளது. இது ஒரு நம்பிக்கை துரோகம். பெண்கள் ரீசார்ஜ் கடைக்காரர்கள் மீது நம்பிக்கை வைத்துதான் ரீசார்ஜ் செய்கிறார்கள். உரிமையாளர்கள் இதுபோன்று நடந்துகொள்வது மிகப் பெரிய தவறு. இதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...