எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான
பணிக்கொடையை ரூ.3 லட்சமாக உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் காப்பீடு மற்றும் முதலீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இது, இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முகவர்களின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக இருந்துவந்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் 11 லட்சம் முகவர்கள் மூலம் 94 சதவிகித பிரீமியம் வருவாயைப் பெற்று வருகிறது. கடந்த நிதியாண்டில் 2.45 லட்சம் முகவர்களை புதிதாக தேர்வு செய்தது. எனினும், பல்வேறு காரணங்களால் 3.40 லட்சம் முகவர்கள் அந்நிறுவனத்தைவிட்டு வெளியேறினர். கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி. நிறுவனத்தின் முகவர்களின் எண்ணிக்கை 10.60 லட்சமாக இருந்தது. இந்நிலையில், முகவர்கள் பணி விலகுவதைத் தடுக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் முகவர்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.3 லட்சமாக உயர்த்துவதாக எல்.ஐ.சி. சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்.ஐ.சி. நிறுவனத்தின் உயரதிகாரிகள் பேசுகையில், ‘நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 2.7 லட்சம் முகவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, நிறுவனத்தை விட்டு 2.25 லட்சம் முகவர்கள் வெளியேறியுள்ளனர். இதையடுத்து, நிகர அளவில் எல்.ஐ.சி.க்கு 45,000 முகவர்கள் கிடைத்துள்ளனர். நடப்பு ஆண்டு ஜனவரி நிலவரப்படி, எல்.ஐ.சி. முகவர்களின் எண்ணிக்கை 11.05 லட்சமாக உள்ளது. எல்.ஐ.சி. நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக முகவர்களாக பணியாற்றியவர்களுக்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும் என்று மத்திய அரசு இதழில் வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினர்.
தற்போது 15 ஆண்டுகள் பணிமுடித்த முகவர்களுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே பணிக்கொடையாக வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஐ.சி. நிறுவனம் வரும் மார்ச் மாதத்துக்குள் பிரீமியம் மூலமாக ரூ.31,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதன்பொருட்டே, 15 ஆண்டுகள் பணிமுடித்த முகவர்களுக்கான பணிக்கொடையை ரூ.3 லட்சமாக அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...