வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதன்
ஐந்து துணை வங்கிகள் இணைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.), அதன் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானெர் & ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் பாட்டியாலா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் ஐதராபாத் ஆகிய ஐந்து துணை வங்கிகளை தன்னுடன் ஒருங்கிணைக்க முடிவுசெய்துள்ளது. இதற்கு, ஏற்கனவே மத்திய அமைச்சரவை மற்றும் எஸ்.பி.ஐ. முதலீட்டாளர்கள், இயக்குநர்கள் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியான பண மதிப்பழிப்பு அறிவிப்பால் ஏற்பட்ட நெருக்கடியால் வங்கி இணைவது தாமதமானது. எனவே, வருகிற 2017-18 நிதியாண்டில் வங்கிகள் இணைவு நடைபெறும் என்று அதன் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த 5 துணை வங்கிகள் ஒருங்கிணைப்புப் பணிகள் தொடங்கும் என்று எஸ்.பி.ஐ. கூறியுள்ளது. இந்த இணைவுக்குப் பின்னர் துணை வங்கிகளின் ஊழியர்கள், எஸ்.பி.ஐ. ஊழியர்களாக கணக்கில் வைத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலமாக, சர்வதேச அளவில் முன்னணி வங்கிகளில் ஒன்றாக எஸ்.பி.ஐ. உருவெடுக்கும். இந்த ஐந்து வங்கிகளும் இணைந்தபின்னர், அதன் சொத்து மதிப்பு ரூ.37 லட்சம் கோடியாகவும், 22, 500 கிளை அலுவலகங்கள், 58,000 ஏடிஎம் மையங்கள் கொண்டிருப்பதோடு, சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட மிகப்பெரிய வங்கியாகத் திகழும்.
முன்னதாக, கடந்த 2008ஆம் ஆண்டில் முதன்முறையாக ஸ்டேட் பேங்க் ஆஃப் சவுராஷ்டிரா வங்கி, எஸ்.பி.ஐ.யுடன் இணைக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தூர் எஸ்.பி.ஐ.யுடன் இணைந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...