அவசியமற்ற விஷயங்களில் தாராளம் காட்டும் நம்மில் பலர்,
அவசியமான விஷயங் களில் கையை சுருக்கிக்கொள்கிறோம். அப்படி அவசியமான, ஆனால் பலரும் அலட்சியமாக நினைக்கும் ஒன்றுதான் ஆயுள் காப்பீடு.
ஆயுள் காப்பீடு அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று காப்பீட்டு முகவர்கள் கூறினால், வியாபாரத்துக்காக கூறுகிறார்கள் என்று சாதாரணமாக ஒதுக்கிவிடுகிறோம். ஆனால் ஆயுள் காப்பீடு என்பது நிச்சயம் அவசியமான ஒன்று.
ஆயுள் காப்பீடு ஏன் அவசியமானது?
நம் வாழ்வில் எப்போதும், எல்லாம் சீராக நடக்க வேண்டும், நமக்கு எந்த அசம்பாவிதமும் நேரக் கூடாது என்று எண்ணுகிறோம். பெரியவர்கள் வாழ்த்தும்போது கூட, 'தீர்க்காயுசா இரு' என்று வாழ்த்துகிறார்கள். ஆனால் எவருக்குமே உத்தரவாதமான ஆயுட்காலம் இல்லை.
அப்படி அசம்பாவிதம் ஏதும் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக கஷ்டப்படாமல் தாங்குவதுதான் ஆயுள் காப்பீடு.
ஒரு மனிதர் நீண்ட நாட்கள் வாழ நினைப்பதே, தனது குடும்பத்தினர் தடுமாறாத நிலையை அடைய வைக்க வேண்டும் என்பதற்குத்தானே! அப்படி நினைக்கும் ஒருவர், தனக்கு ஏதாவது நேர்ந்தால் கூட தனது குடும்பத்தினருக்கு பொருளாதார நிம்மதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்புதானே?
அங்கேதான் கைகொடுக்கிறது, 'லைப் இன்சூரன்ஸ்' எனப்படும் ஆயுள் காப்பீடு.
பலர் கூடியிருக்கும் கூட்டத்தில், ஆயுள் காப்பீடு குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்று கேட்டால் ஏறக்குறைய எல்லோருமே தெரியும் என்று கை தூக்குவார்கள். 'ஆகா, இவ்வளவு பேர் விஷயம் தெரிஞ்சவங்களா இருக்காங்களேன்னு சந்தோஷத்துடன், 'எத்தனை பேர் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கீங்க?'னு கேட்டால் உங்கள் சந்தோஷம் உடனடியாய் வடிந்துவிடும்.
இந்தியா முழுவதும் வெறும் 5 சதவீதம் பேர்தான் இன்சூரன்ஸ் பாலிசி பெற்றிருக்கிறார்களாம். ஆக இன்னும் எத்தனை கோடி பேர் காப்பீடு பெற வேண்டியிருக்கிறது!
வெளிநாடுகளில் எல்லாம் மக்கள் அவர்களே விருப்பப்பட்டு இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். அங்கே ஆயுள் காப்பீடு முதல் மருத்துவக் காப்பீடு வரை எல்லாம் வெகு இயல்பானவை. ஆனால் நம் நாட்டில் இன்னும் இன்சூரன்ஸ் எடுக்க வற்புறுத்த வேண்டியிருக்கிறது.
ஆயுள் காப்பீடு என்பதே, தன்னை நம்பி இருக்கும் குடும்பத்துக்கு, தான் இல்லாமல் போனாலும் நிதிப் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுப்பதுதான். அந்தப் பாதுகாப்பை போதுமான அளவுக்கு ஒருவர் செய்திருந்தார் என்றால், அவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் கூட, அவரை நம்பி இருக்கும் குடும்பம் தற்போது வாழும் அதே வாழ்க்கையைத் தொடரமுடியும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காண அவகாசம் கிடைக்கும். அதன் மூலம், அந்த குடும்பமும் ஒரு கட்டத்தில் மேலே வந்துவிடும். இப்படி, ஆபத்பாந்தவனாகத் திகழ்வதுதான் ஆயுள் காப்பீடு.
ஆனால் நம்மூரில் பலர், இன்சூரன்ஸை பாதுகாப்பாகக் கருதாமல் முதலீடாகத்தான் பார்க்கிறார்கள். 'வருமான வரி கட்ட வேண்டியிருக்கும். அதனால் ஒரு பாலிசி போட்டேன், இப்போ ஒரு பாலிசி எடுத்தா 15 வருஷம் கழிச்சு மூணு லட்ச ரூபாய் கிடைக்கும்னு சொன்னாங்க...' என்றெல்லாம் பாலிசி எடுப்பவர்கள் தான் அதிகம்.
எது எப்படியிருந்தாலும், பாலிசி எடுப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான்!
Term insurance is more important than life insurance.
ReplyDeleteYou can get term insurance at a lower premium rate than life insurance.