ஜல்லிக்கட்டு குறித்த அனைத்துத் தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்றம் வருகிற 31ஆம் தேதி விசாரணை செய்யவுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும்வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவந்தது. இந்த அவசரச் சட்டம் தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து சட்ட முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்புத் தரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனால், தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த அவசரச் சட்டம் நிரந்தரச் சட்டமாக்கப்படும் என்றும் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, அரியமா சுந்தரம், ஆனந்த் குரோவர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் கியூபா, பியாபோ போன்ற விலங்குகள் நல அமைப்புகள் சார்பில் ஆஜராக வந்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜரான இவர்கள், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு தற்போது கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் என்பது, கடந்த 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்று வாதிட்டனர். விலங்கு நல வாரியம் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஒரு அமைப்பாகும். ஒருபுறம் மத்திய அரசு தமிழக அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துவிட்டு, மறுபுறம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அமைப்பின் மூலம் தமிழக அரசுக்கு எதிராக முறையிடுவது என்பது மத்திய அரசின் இரட்டை வேடம் என்றும் இது, தமிழக அரசுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் என்றும் விமர்சித்தனர்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக ஆஜரான வக்கீல்கள் தாக்கல் செய்துள்ள வழக்கை திரும்பப் பெறவேண்டும் என்றும் விலங்குகள் நல வாரிய அதிகாரி எம்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு விஷயத்தைப் பொருத்தவரை விலங்கு நல வாரியத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலை பெற்றிருக்க வேண்டும். இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக விலங்கு நல வாரியம் வழக்கு தொடர்ந்துள்ளதாக ஊடகம்வாயிலாக அறிகிறோம். எனவே, தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்தவர்கள் அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். ஒருவேளை, வழக்குத் தொடர எண்ணம் இருந்தால் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் அறிவிப்போம்’ என்றார்.
இந்நிலையில், கடந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்குகளை வாபஸ் பெறத் திட்டமிட்டுள்ளது. அதையடுத்து, மத்திய அரசு தாக்கல்செய்த வழக்கு, பிராணிகள் நல ஆர்வலர்கள் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் என அனைத்துத் தரப்பு மனுக்களையும் உச்சநீதிமன்றம் வருகிற 31ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...