தமிழகத்தில் பல இடங்களில் ’மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில்’ என்னும்
பெயரில் முஸ்லிம் மக்களுக்கான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த
நீதிமன்றங்களால் ஏராளமான முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது. இந்த அமைப்பு பல பெண்களை அவர்களது வறுமை காரணமாக
கணவரிடமிருந்து கட்டாயமாகப்
பிரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த கவுன்சில், முஸ்லிம்களின் குடும்பத் தகராறு அல்லது சொத்துத் தகராறு குறித்த தகவலை அறிந்தவுடன் தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கும் எதிர்த்தரப்பிற்கும் சம்மன் அனுப்புகிறது. அதுமட்டுமில்லாமல் மத உத்தரவை மீறக் கூடாது என அவர்களை எச்சரிக்கிறது.
எம்பிஏ பட்டதாரியான ரஹ்மான் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ஷரியத் கவுன்சில் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள மக்கா மஜீத் என்ற இடத்தில் ஷரியத் கவுன்சில் செயல்படுகிறது. அவர்கள் என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். என்னைப் போல் பலர் இந்த கட்டப்பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு திருவல்லிக்கேணி துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனுவில், அனைவரும் விருப்பப்பட்டு தான் ஷரியத் கவுன்சிலுக்கு செல்கின்றனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் , ’நீதிமன்றம் போலவோ, கட்டப்பஞ்சாயத்து செய்வதிலோ ஷரியத் கவுன்சில் ஈடுபடக்கூடாது. ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் அதைத் தடுக்க வேண்டும்’ என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், ’துணை ஆணையர் தாக்கல் செய்த பதில் மனு திருப்தி அளிக்கவில்லை. எனவே புதிய பதில் மனுவை, நான்கு வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இஸ்லாமிய திருமணங்களை ரத்து செய்யும் தலாக் சான்று வழங்கும் ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹாஜிக்கள் வழங்கும் தலாக் உத்தரவுகளுக்கு சட்ட அந்தஸ்து கிடையாது எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...