Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இந்தப் பதிவு D.S.P.செல்வத்தின் முகநூல் பதிவு.மிகவும் அற்புதமான சிந்திக்க வைக்கும் பதிவு.                                                 --------------------------------------------------------------------------

இனிய இளவல்களே,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நீங்களாகவே மெரினா கடற்கரையில் திரண்டுவந்து நின்ற காட்சியைப் பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன்.

தமிழ்மண்ணின் ஆணிவேரான கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே உங்கள் மெரினா கடற்கரை நிகழ்வை நான் பார்க்கிறேன்.

விவசாயப் பின்னணியில் பிறந்துவளர்ந்த வேளாண்மைப் பட்டதாரி என்ற வகையிலும், விவசாயம் தழைக்கவேண்டும் என்ற வேட்கைகொண்ட ஊடகவியலாளன் என்ற முறையிலும், உங்கள் உணர்வை வியந்து போற்றுகிறேன். இதே உணர்வு சரியான திசையில் செலுத்தப்பட்டால் மகத்தான மாற்றங்கள் சாத்தியமே என்று எனக்குள் நம்பிக்கை பெறுகிறேன்.

இளைஞர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமும் இப்போது புரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான உண்மை, இன்று தமிழக விவசாயம், அழிவின் விளிம்பில் நிற்கிறது. ஆங்காங்கே நிகழும் விவசாயிகளின் தற்கொலைகள், நாம் எதிர்நோக்கும் பேரழிவின் முன்னறிவிப்புகள் மட்டுமே.

ஒரு பாலைவனத்தை எப்படி பசும் சோலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் இஸ்ரேல்.
ஒரு பசும் சோலைவனத்தை எப்படி பாலைவனமாக மாற்ற முடியும் என்பதற்கு உலக அரங்கில் முன்னுதாரணம் தமிழகம்.

மாடுகட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த பெருமைக்குரிய விவசாயிகள், இன்று கருகும் பயிர்களைப்  பார்த்து மனமுடைந்து தற்கொலைசெய்துகொள்கிறார்கள். இந்த பரிதாப நிலைமைக்கு, நம்மை ஆண்டவர்கள் மட்டும் காரணமல்ல, நமது அறியாமையும் காரணம்.

இந்த நிலைமை மாறவேண்டுமானால் - தமிழக விவசாயம் மீண்டும் தழைக்க வேண்டுமானால் - அது ஜல்லிக்கட்டு மூலமாக நடந்துவிடாது என்ற உண்மையை நாம் உணரவேண்டும். தமிழக விவசாயம் குறித்த விரிவான புரிதல் நமக்கு வேண்டும்.

கீழ்க்கண்ட 4 வகையான பணிகளை சாதித்தால், தமிழக விவசாயம், உலக அரங்கில் முன்னுதாரணமாக பேசப்படும் காலம் உருவாகும்.

1. மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.
-----------------------------------------------------
மேகத்தை குளிர்வித்து மழையாக ஈர்க்கும் மந்திர சக்தி மரங்களுக்கு மட்டுமே உண்டு. இஸ்ரேலியப் பாலைவனத்தை பசுமையாக்கிட அவர்கள் செய்த முதல் வேலை, மரங்கள் நடும் மாபெரும் தேசிய இயக்கத்தை நடத்தியதுதான். 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் கொண்ட அந்த நாட்டில், 25 கோடி மரங்கள் புதிதாக நட்டு வளர்க்கப்பட்டதால், அந்தப் பாலைமண் பூமியில் இப்போது ஆப்பிளும், தக்காளியும் நம்மைவிடப் பல மடங்கு விளைகிறது.

ஆனால் நாம், நம்மிடம் இருந்த பசுமை மாறாக் காடுகளை அழித்து எஸ்டேட்டுகளாகவும், சாமியார் மடங்களாகவும், தார்ச் சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். 1,30,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டுக்கு மழைதரும் 100 கோடி மரங்கள் தேவை.

நமது இளைஞர்கள் களம் இறங்கினால், நமது 17,000 கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 60,000 மரங்கள் வீதம் மழைதரும் மரங்களை நட்டு வளர்த்து 100 கோடி மரங்கள் வளர்ப்பது 100 சதம் சாத்தியமே.

வேலிக்கருவை என்ற நச்சுமரத்தை அப்புறப்படுத்தி, வேம்பு, மலைவேம்பு, புளி, பூவரசு, புங்கன், தேக்கு, செம்மரம், சந்தனம், செஞ்சந்தனம், சவுண்டல் உள்ளிட்ட மழைதரும் மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும்.

இந்த 100 கோடி இலக்கினை சாதித்தால், ஒவ்வொரு ஆண்டும் நாம் தண்ணீருக்காக கர்நாடகத்திடமும், கேரளத்திடமும் கையேந்தும் நிலைமை ஒருபோதும் வராது. விவசாயிகள் வானத்தை வெறித்துப் பார்த்து பெருமூச்சுவிடும் நிலைமை முற்றிலும் மாறிவிடும். மாதம் மும்மாரி பொழிவது இயற்கை நியதியாக மாறிவிடும்.

2. நீராதாரங்கள் பாதுகாப்பு
----------------------------------
தொழில்நுட்ப அறிவு பற்றி மேலைநாடுகளில் பேசப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிற நதியின் குறுக்கே பிரமாண்ட அணையைக் கட்டும் தொழில்நுட்ப அறிவை செயலில் காட்டி சாதித்தவன் தமிழன். ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உருவாக்குவதையும், அவற்றைப் பேணிக்காப்பதையும் அரசின் தலைமைப் பணியாகக் கொண்டிருந்தவர்கள் நம் முன்னோர்கள்.

நீராதாரங்களை கூறுபோட்டுவிற்கும் கொலைபாதகர்களால்தான் நமது விவசாயம் சின்னாபின்னமானது. இருக்கிற ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் கால்வாய்களை போற்றிக் காப்பதையும், புதியனவற்றை சாத்தியமான அளவில் உருவாக்குவதையும் இளைய தலைமுறை தனது கடமையாக தோளில் ஏற்கட்டும்.

3. பல்லுயிர் சூழல் விவசாயத்தை மீண்டும் மலரச் செய்வோம்.
---------------------------------------------------------------------------
ஜல்லிக்கட்டு நமது முன்னோரின் வீர விளையாட்டாக இருந்தது உண்மை. அவர்கள் வாழ்வில் காளைகள் மட்டும் அல்ல - பசுக்கள், எருமைகள், ஆடுகள்,  முயல்கள், பன்றிகள், கோழிகள், கிளிகள், குருவிகள், புறாக்கள், மீன்கள், வண்ணத்துப் பூச்சிகள், தட்டான்கள், மண்புழுக்கள் என பல்லுயிர் சூழ்ந்த வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்தனர்.

இன்றைய விவசாயம் மீண்டும் பல்லுயிர் சூழ்ந்த விவசாயமாக மாறவேண்டும். அப்போதுதான் மலடாகிப்போன மண், மீண்டும் உயிர்பெற்று அதிக விளைச்சலை அள்ளித்தரும். நமது விவசாயிகளை பல்லுயிர் சூழல் விவசாயத்திலும், புதிய விவசாய தொழில் நுட்பங்களிலும் பயிற்றுவித்து அவர்களுக்குத் துணை நிற்பது அவசர அவசியம்.

பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தின் ஓர் அடையாளமாக நமது முன்னோரின் ஏறு தழுவுதல் வீர விளையாட்டு இருந்தது என்று பெருமை கொள்வோம். அதற்காக இன்றைய கணினி யுக இளைஞர்கள் ஏறு தழுவுதல் வீர விளையாட்டில் இறங்கி ஒருகை பார்க்கவேண்டும் என்று சிந்திப்பது அறியாமை.

கணினி யுக இளைஞர்களில் வாய்ப்புள்ளவர்கள், பல்லுயிர் சூழ்ந்த விவசாயத்தில் ஈடுபடலாம். நாட்டுமாடு, நாட்டு ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பதை பெரும் தொழிலாக செய்யலாம். ஒற்றை நெல் சாகுபடி, துல்லியப் பண்ணையம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி விவசாயத்திலும் அதிக லாபம் ஈட்ட முடியும். அது மட்டுமல்ல, வேறு எங்கும் கிடைக்காத மன நிறைவும் இதில் பெறமுடியும்.

4. ஆலைத் தொழில்போல், திட்டமிடப்பட்ட விவசாயம்
--------------------------------------------------------------------
முதல் மூன்று பணிகளால் தண்ணீரும், மண் வளமும் உறுதிசெய்யப்பட்டு உயர் விளைச்சல் சாத்தியமாகும். ஆனால், அதிகமாக விளைந்த தக்காளியும், வெங்காயமும், வாழைக்காயும் சாலைகளில் கொட்டப்படுவது போன்ற நிலைமைகள் இனி வரவே கூடாது. அதற்கு ஒரே வழி, மாநில அளவிலும், வட்டார அளவிலும் விவசாய உற்பத்தி திட்டமிடப்பட்ட வேண்டும். ஆலைத் தொழில்போல், விவசாயத்தையும்  PROFESSIONAL VENTURE ஆக மதித்துப் போற்றவேண்டும். அதற்குரிய பயிற்சிகள் மானிய உதவிகள், மாதிரிகள் அனைத்தையும் வழங்க வேண்டும்.

மற்ற எல்லாவித ஆலை உற்பத்தி பொருட்களுக்கும், லாபத்துடன் கூடிய விலை நிர்ணயம் செய்யப்படுவதுபோல், விவசாய விளைச்சலுக்கும் கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்கான நிர்பந்தத்தை அரசுக்கு நாம் உருவாக்க வேண்டும்.

தமிழக விவசாயத்தில் உண்மையான புரட்சியை சாத்தியமாக்கும் இந்த 4 மகத்தான பணிகளையும் எந்த அரசாங்கமும் தானே செய்யாது. அதற்குரிய அக்கறையும் மனத்துணிவும் இளைய சக்தியிடம் பீறிட்டுக் கிளம்பினால் மட்டுமே இவை சாத்தியம்.

அன்பு இளவல்களே,
------------------------
ஜல்லிக்கட்டு ஆதரவு என்ற அடையாள போராட்டத்தில் நீங்கள் முடங்கிவிடவேண்டாம். பண்டிகைகால நிகழ்வுகள்போல் உங்கள் உணர்வுகள் முனைமழுங்கிப் போகவேண்டாம்.

நமது கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை மேலும் வளர்த்தெடுங்கள். மேலே சொன்ன நான்கு விதமான பணிகளில் எது முதலில் சாத்தியமோ முதலில் அதைத் தொடங்குங்கள்.

ஆக்கபூர்வ ஊடகங்களும், நேர்மையாகச் சிந்திக்கும் வேளாண்மைத் துறை சார்ந்தவர்களும் உங்களுக்குத் துணை நிற்பார்கள்.

பசுமையான தமிழகம் மலரட்டும்! விவசாயிகள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும்!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive