நவம்பர் 8-ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பெரிதும் விவாதிக்கப்படும் விஷயம்
பணமில்லாப் பொருளாதாரம். இந்தியா போன்ற கல்வியறிவும் தொலைத்தொடர்புக்
கட்டமைப்பும் குறைந்த நாடுகளில் இது சாத்திய மில்லை என்றும், *நாட்டின்
அதிரடி வளர்ச் சிக்கு இதுதான் ஒரே வழி என்றும் இரு தீவிர நிலைப்பாடுகள்
இருக்கின்றன. இவைபெரும் பாலும் தகவல்களின் அடிப்படையில் இல்லாமல் கட்சி சார்புள்ள நிலைப்பாடாகவே உள்ளது.*
இதுவரை இந்தியாவில் பொருளாதாரப் பரிவர்தனைகள் பெரும்பாலும் நேரடிப் பணப் பரிமாற்றத்தையே வழியாகக் கொண்டிருக்கிறது. அருகிலுள்ள டீக்கடையில் டீ சாப்பிடுவது முதல் பல லட்சங்கள் மதிப்புள்ள கார்களும் வீடுகளும் வாங்குவது வரை பெரும்பாலும் பணமே பயன்படுத்தப்படுகிறது. மின்னணு பணப் பரிமாற்றம் என்பது மொத்தப் பொருளாதாரப் பரிமாற்றத்தின் அடிப்படையில் மிகவும் குறைந்த அளவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. *ஒரே நாளில் இந்த மாற்றம் சாத்தியமா? இதிலுள்ள சவால்கள் என்ன? சோதனைகள் என்ன?*
பணப்பரிமாற்றமா அல்லது பணமில்லாப் பொருளாதாரத்துக்கான மின்னணுப் பரிமாற்றமா என்று முடிவு செய்யுமுன் இரண்டின் சாதக பாதகங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இதுவரை நடைமுறையிலுள்ள பணப்பரிமாற்றத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன? நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு நாட்டில் *அதிக மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள்தான் 84% புழக்கத்தில் இருந்தன. இதுதான் கறுப்புப்பணத்துக்குத் துணை போனது என்பதுதான் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. அதிக மதிப்புள்ள நோட்டுகள் கறுப்புப்பணத்தை சேமித்து வைக்க உபயோகப்பட்டது என்பதில் உண்மை இருக்கலாம். *ஆனால் இதுவே கறுப்புப்பணத்துக்குக் காரணமாகாது.*
* பண மதிப்பு நீக்கநடவடிக்கைக்குப் பிறகு பல கல்வி நிறுவனங்கள் தங்களது கறுப்புப் பணத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக வெள்ளையாக மாற்ற முயன்றதும் கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்பட்டது *பல இடங்களில் நடந்தது. இன்றைக்குத் *தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடத்துக்குக் குறைந்தது ரூ. 50 லட்சத்திலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக வாங்கப்படுகிறது.*
இந்தப் பணம் அனைத்தும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதோடு பொருளாதாரத்துக்கும் சமூகத்துக்கும் கேடு விளைவிக்கும் பணவீக்கத்துக்கும் காரண மாகிறது. நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கும் தெருமுனை மளிகைக்கடைகளில் பலவற்றிலும் வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுப்பதும் கிடையாது. விற்பனை மொத்தமும் கணக்கில் காட்டப்படுவதும் கிடையாது. இந்த வரி ஏய்ப்பும் கறுப்புப்பணமாகவே மாறுகிறது.
*பாதிக்கப்படும் சாதாரண மக்கள்*
கறுப்புப்பணத்துக்குப் பெரும்பாலும் துணை போவது சாதாரண மனிதன் என்பது எவ்வளவு உண்மையோ அதைவிடப் பலமடங்கு உண்மை கறுப்புப்பணத்தினால் பாதிக்கப்படுவது சாதாரண மனிதன் என்பது.
தனியார் மருத்துவக்கல்லூரிகளில் லட்சங் களையும் கோடிகளையும் கொடுத்துப் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் கணக்கில் வராமல் கொடுத்த பணத்தை விரைவிலேயே சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பார்களேயல்லாமல் சமூகத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்றா நினைப்பார்கள்? இதன் விளைவு மருத்துவத் துக்கு வரும் நோயாளிகளுக்குத் தேவையில்லாத பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள், அதிக கமிஷன் கொடுக்கக்கூடிய விலையுயர்ந்த மருந்துகள் இதன் மூலம்தான் படிப்புக்குக் கொடுத்த பணத்தை மீட்க முடியும். இதனால் பாதிக்கப்படுவது சாதாரண மனிதனே தான்.
கறுப்புப்பணத்தின் அடுத்த போக்கிடம் நிலமும் வீடுகளும். கறுப்பாக சேர்க்கப்பட்ட பணம் நிலத்திலும் வீடுகளிலும் பெருமளவு முதலீடு செய்யப்படுகிறது. இதனால் சொந்த வீடு என்பது சாமான்ய மனிதனுக்கு எட்டாக்கனவாகவே உள்ளது. தேவைக்கு அதிகமாக மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்படும் மாளிகை போன்ற வீடுகளால் மணலுக்குத் தேவை அதிகமாகிறது. இதுவே மணல் கொள்ளைக்கும் வித்திட்டு மீண்டும் மீண்டும் கறுப்புப்பணம் பெருகவே வழிசெய்கிறது. செம்மரங்கள், கிரானைட், ஆற்றுமணல் கொள்ளை போன்ற இயற்கைச் செல்வங்கள் சூறையாடப்படுவதற்குக் காரணமே இந்தக் கறுப்புப்பணம்தான்.
இவை எல்லாவற்றையும் விட கவலை தரக்கூடிய விஷயம் தேர்தல்களில் விளையாடும் கறுப்புப்பணம்தான். சட்டப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் அதிகபட்சம் 25 லட்சம் மட்டுமே செலவு செய்யலாம். *ஆனால் குறைந்த பட்சம் 5 கோடியாவது இல்லாமல் வெற்றியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதுதான் நிதர்சனம்.*இந்தப்பணம் எங்கிருந்து வருகிறது? கறுப்புப்பணம்தான். வங்கியிலிருந்து எடுத்து செலவு செய்ய முடியாது. ஏனென்றால் வேட்பாளரின் வங்கிக்கணக்கு எல்லாமே தேர்தல் கமிஷனின் பரிசோதனைக்குட்பட்டது.
*கல்வி நிறுவனங்களெல்லாம் மின்னணுப் பரிமாற்றத்துக்கு மாற வேண்டிய கட்டாயம் உண்டானால் கறுப்புப்பணம் உருவாவது பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்படும்.* `நீட்’ எனப்படும் மருத்துவக் கல்விக்கான தேசியத்தகுதித் தேர்வு கல்வி நிறுவனங்களில் கறுப்புப்பணத்தின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு சரியான முயற்சி. திரைப்படத்தில் கதாநாயகன் இன்றைக்கு எல்லோரும் கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும் பில் கேட்டு வாங்குங்கள் என்று வசனம் பேசினால் கைதட்டும் நாமே, *தங்கம் வாங்கும்போது பில் போட்டால் வரி* *கூடுதலாகும்* *என்று சொன்னவுடன்*
*பில் இல்லாமலே* *வாங்கிக் கொண்டு வருகிறோம் என்பதுதான் கசப்பான உண்மை*. கறுப்புப்பணம் சேர்வதற்கு நாமே காரணமாகிறோம்.
*வங்கிக்கடன் வாய்ப்பு*
பணப்பரிமாற்றம் கறுப்புப்பணம் உருவாகத் துணை போகிறது, மின்னணுப்பணப் பரிமாற்றம் இதனைப் பெருமளவு குறைக்கிறது என்பதெல்லாம் சரிதான். இதனால் உண்டாகும் பலன்கள் அடித்தட்டு மக்களுக்குப் போய்ச் சேருமா என்ற கேள்வி எழுகிறது.
அதிசயத்தக்க விதத்தில் மின்னணுப்பரிமாற்றத் தினால் பெருமளவு பயனடையப் போவது இந்த அடித்தட்டு மக்கள்தான். வங்கிகளின் கடன்களைப் பெருமளவில் உபயோகப்படுத்திக் கொள்வது பெருநிறுவனங்களும், உயர்தட்டு மற்றும் மத்தியதர மக்களும்தான். அடித்தட்டு மக்களுக்கு வங்கிக்கடன் என்ன என்பதே கிடையாது என்று சொல்லலாம். வங்கிகளில் கடன் வாங்குபவர்களிடம் கேட்பது - சம்பள சான்று, வங்கிக்கணக்கின் மூன்று மாதக் கணக்கு விவரம். தொழில் செய்வோராக இருந்தால் வருமான வரித்தாக்கல் செய்த விவரங்கள்.
முறைசாரா அமைப்புசாரா தொழிலாளர்களிடம் இவை எதுவுமே இருப்பதில்லை. அதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் தள்ளப்பட்டு அநியாய வட்டிக்கு ஆட்படுகிறார்கள். இது அவர்களின் வருமானத்தைக் குறைப்பதோடு இவ்வாறு அவர்கள் கொடுக்கும் வட்டியானது கறுப்புப்பணமாக மாறுகிறது. ஒரு தையல் இயந்திரத்துடன் கடை வைத்திருக்கும் ஒருவரை எடுத்துக் கொள்வோம். இவருக்கு வங்கிக் கடன் கிடைப்பது சுலபமல்ல. ஏனென்றால் அவரைப் பற்றிய கடன் நம்பகத்தன்மைக்கான எந்த சான்றும் இவரால் அளிக்க முடியாது.
இவரே தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து தையல் கூலியை மின்னணு முறையில் வாங்க ஆரம்பித்தாரானால் மொத்தப் பணமும் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதன் மூலம் இவரது வங்கிக்கு இவரது வருடாந்தர வரவு எவ்வளவு, அதில் செலவு எவ்வளவு, இவரது மொத்த வருமானம் அல்லது லாபம் எவ்வளவு என்பது தெள்ளத்தெளிவாகிறது. இதுவே அவரது கடன் நம்பகத்தன்மைக்குச் சான்றாகிறது. இவர் தனது கடையை விரிவுபடுத்த நினைத்தால் வங்கிகளுக்கும் கடன் கொடுப்பது எளிதாகிறது.
பணம் என்பதை முழுவதுமாகத் தவிர்க்கவே முடியாது என்பதுதான் உண்மை. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேயே பணம் என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் முழுமையாகப் பணமில்லாப் பொருளாதாரம் என்பதை விட பணப்புழக்கம் குறைந்த பொருளாதாரத்தை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும்.
*சாதித்த கென்யா*
தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரக் கட்டமைப்பு நாட்டின் எல்லாப் பகுதிகளையும் அடையாத நிலையில் மின்னணுப்பரிமாற்றம் என்பது எப்படி சாத்தியமாகும்? ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்ப முன்னேற்றத்தில் மின்சாரமும் அகண்ட அலைவரிசையும் தேவையே இல்லாமல் சாதாரண மொபைல் மூலமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும். சாதாரண மொபைலில் குறுஞ்செய்திகள் மூலமே பணப்பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை சாதித்துக்காட்டியிருக்கிறது கென்யா.
நம் நாட்டிலும் கிராமங்களில் பணம் மூலம் வர்த்தகம் என்பது சில நூறுகள் அல்லது ஆயிரங்களில் மட்டுமே இருக்கிறது. இதற்கு 50, 100 போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகளே போதுமானது. விவசாயிகளின் விளை பொருட்களை விற்கும்போது மட்டுமே சில பத்தாயிரங்களில் தொடங்கி லட்சங்களில் பணம் கை மாறுகிறது. இன்றைக்கு எல்லா கிராமங்களிலும் வங்கிக் கிளைகள் ஒன்றாவது இருக்கின்றன.
அவ்வாறு இல்லாவிட்டாலும் நாட்டில் எல்லோரும் வங்கிக்கட்டமைப்பில் இணையும்போது தானாகவே வங்கிக்கிளைகள் விரிவடையும். விவசாயிகள் பலருக்கு இன்று வங்கிக்கணக்கும் வங்கிகளில் கடன் வசதியும் கிடைத்துள்ளது. ஏற்கெனவே சொன்னது போல வருமானம் முழுவதும் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டால் இது கடன் பரிவர்தனைகளை மேலும் எளிதாக்குகிறது.
*வருமானம் குறையுமா?*
நாட்டில் பெரும்பான்மையானோர் ஆதார் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். மார்ச் 2017க்குள் எல்லா வங்கிக்கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விடும். இதுவரை ஜன்தன் யோஜனா மூலம் வங்கிக்கணக்கு தொடங் காதவர்கள்கூட உடனே கணக்குத் துவங்கி ஆதா ருடன் இணைத்துக் கொள்ளலாம். ஆதாருடன் இணைந்த மின்னணுப்பரிமாற்றம் சீக்கிரத்தி லேயே பெரிய அளவில் விரிவடையும். அப்போது கிரெடிட், டெபிட் அட்டைகள் இல்லாமலேயே மின்னணுப்பரிமாற்றம் என்பது சாத்தியமாகும்.
இதில் *குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதுவரை விசா/மாஸ்டர் போன்ற அமெரிக்கக் கம்பெனிகளுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 2 முதல் 2.5 சதம் வரை கமிஷனாகக் கொடுத்த பணம் இனி வெளியே போகாது. இதனால் அன்னியச் செலாவணியும் மிச்சமாகிறது. ஆதார் மூலமான பணப்பரிமாற்றத்துக்கு ஆதார் எண்ணுடன் கைரேகை மூலம் உறுதிப்படுத்துவது அவசியம் என்பதால் கிரெடிட், டெபிட் கார்டுகள் போல *குளோனிங் ஸ்கிம்மிங் போன்ற அச்சுறுத்தல்கள் இல்லை*
மின்னணுப்பரிமாற்றம் பற்றி பல அச்சங்கள் பரப்பப்படுகின்றன. இந்திய வங்கிகளின் தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. ஹேக்கர்கள் இவற்றை எப்பொழுது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்பது ஒரு பொதுவான கருத்தாக வைக்கப்படுகிறது. ஆனால் இது ஏதோ நவம்பர் 8க்குப் பிறகுதான் உருவானது போலப் பேசப்படுவதுதான் வியப்பாக உள்ளது. தேவைகள் உருவாகும்போது அதற்கேற்பக் கட்டுமானங்களும் பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்படும் என்பதுதான் தொழில்நுட்பத்துறையில் நாம் காணும் அம்சம்.
ஒய்2கே என்று சொல்லப்பட்ட 2000 வருடம் வந்த போது எழுந்த பிரச்சினையை உலக அளவில் சமாளித்ததில் இந்தியர்களுக்குப் பெரும்பங்கு உண்டு என்பதும் இந்தப் பிரச்சினையை சரி செய்து விட்டு இந்தத் திருத்தங்கள் சரியாக செய்யப்பட்டனவா என்று முதன்முதலில் நேரடியாகக் கண்டறிந்தது அப்போது 90 நாட்கள் முன்னரே முன்பதிவு செய்த இந்திய ரயில்வே என்பதும் நாம் மறந்து விட்டோம்.
பணமில்லாப் பொருளாதாரம் என்பது முற்றி லும் பணத்தை ஒழிப்பதல்ல. குறைந்த மதிப்பு நோட்டுக்களை குறைந்த அளவில் பயன்படுத் துவதும் ஆயிரங்களிலான பரிவர்த்தனைகளை மின்னணுப்பரிமாற்றமாக்குவதும் மொத்தத்தில் எல்லா வர்த்தகப் பரிவர்த்தனைகளையும் மின்னணுமயமாக்குவதுமேயாகும். இதன் மூலம் வரி வருவாய் உயரும்போது அது வரிவிதிப்பு விகிதங்களைக் குறைக்கும்.
வரிவிகிதங்கள் குறைந்தால் வரி ஏய்ப்பும் குறையும். ஆனால் இவை எல்லாம் ஒரே இரவில் நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில்தான் முடியும். *கறுப்புப்பணத்திற்கு எதிரான போரில் மின்னணுப்பணப் பரிமாற்றம் என்பது ஒரு காரணிதானே தவிர இதுவே எல்லாமுமாகிவிடாது*.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...