தமிழ்நாடு மாநிலம் தவிர, இந்தியாவின் 28 மாநிலங்களிலும் 1965-லேயே மத்திய
அரசின் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுவிட்டது.
அதன்படி,
கேரளத்தில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியில், மாநிலத்தின் முதல் மொழி மலையாளம்
2-ஆவது மொழி ஆங்கிலம். 3-ஆவது மொழி மத்திய ஆட்சியின் ஹிந்தி மொழி.
இம்மூன்று மொழிகளையும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும்.
இதேபோலத்தான் வடகிழக்கே மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மொழி வங்காளமாகவும்,
2-ஆவது மொழி ஆங்கிலமாகவும், 3-ஆவது மொழி மத்திய ஆட்சி மொழியான ஹிந்தியும்
உள்ளன.
உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும், புது தில்லியிலும்
ஹரியானாவிலும் மும்மொழிகள் இல்லை. அம்மாநிலங்களின் முதல் மொழியே மத்திய
ஆட்சி மொழியான ஹிந்தியாக அமைந்துவிட்டது. 2-ஆவது மொழி ஆங்கிலம். 3-ஆவது
மொழியான ஹிந்திக்குப் பதிலாகத் தென்னிந்திய மொழி ஒன்றைப் படிக்கலாம் என
யோசனை கூறப்பட்டது.
1960-இல் "ஹிந்தி பேசாத மாநிலத்தார் விரும்பும் வரை ஹிந்திக்கு இணையாக
ஆங்கிலம் தொடரும்' என்று நேருஜி வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த உறுதிமொழியானது ஹிந்திபேசாத மாநிலத்தார் எதிர்காலத்தில் ஹிந்தி பேச
முன்வருவர் என்ற நம்பிக்கையில் தரப்பட்டதே தவிர, எப்போதுமே ஆங்கிலத்தை
வைத்துக் கொள்வதற்காக அல்ல என்பதைக் காட்டுமாறு, "விரும்பும் காலம் வரை'
(as long as) என்பது நேருஜியின் சொற்களில் உள்ளதைக் கவனிக்கத் தவறக்
கூடாது.
1965-இல் தமிழ்நாடு மாநிலத்தில் வெடித்த மாணவர்களின் ஹிந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சி அரசியல் ரீதியில் தி.மு.க.-வுக்கு சாதகமாகியது.
1967-இல் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த தி.மு.க. ஆட்சி மாநிலக் கல்விக்
கொள்கையில் மத்திய ஆட்சி மொழியான ஹிந்தியைத் தவிர்த்தது. தமிழ், ஆங்கிலம்
என இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியது. இவற்றில் தமிழுக்கு
முக்கியத்துவமில்லாமல் ஆங்கிலத்திற்கே முதன்மை தரப்பட்டதால், இருமொழிக்
கொள்கை நடைமுறையில் ஒரு மொழிக் கொள்கையானதுதான்.
ஹிந்தியை எதிர்ப்பதற்காகவே ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டதற்கு 'Hindi never,
English ever' என்ற கருத்துருவை தி.மு.க.-வின் கோஷம் உருவாக்கியது.
அண்ணாவின் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு அமைந்த கருணாநிதியின் பலகட்ட
ஆட்சிகளிலும், அதன்பின்னர் 13 ஆண்டுகள் நீடித்த எம்.ஜி.ஆரின் பலகட்ட
ஆட்சிகளிலும், பின்னர் அமைந்த ஜெயலலிதாவின் பலகட்ட ஆட்சிகளிலும் ஆங்கில
வகுப்புகளைக் கொண்ட நர்சரிப் பள்ளிகளும் மெட்ரிக் பள்ளிகளுமே அதிக வளர்ச்சி
பெற்றன. தமிழ்மொழியில் போதித்து வந்த அரசுப் பள்ளிகளும் அரசு உதவிப்
பள்ளிகளும் பின்னடைவைக் கண்டன.
அதேசமயம், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்திய கர்நாடகா மாநிலத்தில்
மாணவர்களுக்குக் கன்னட மொழி கட்டாயமாக்கப்பட்டது. மலையாளம் படிக்காத மலையாள
மாணவர்கள் கேரளாவில் இல்லை. தெலுங்கு மொழியை ஒதுக்கிவிட்டுப் படிக்கும்
வாய்ப்பு ஆந்திர மாணவர்களுக்குத் தரப்படவில்லை. கர்நாடகாவில் கன்னடத்தைக்
கற்பிக்காத பள்ளிகள் இழுத்து மூடப்படும் என்றே கர்நாடக அரசு ஆணையிட்டது.
இதேநிலை தமிழ்நாட்டில் இல்லை. அப்படி உருவாகியிருக்குமானால், அண்ணாவின்
இருமொழிக் கொள்கை மகத்தான வெற்றி பெற்றதாகியிருக்கும். கேரள, கர்நாடக,
ஆந்திர மாநிலங்களில் அமல்செய்யப்பட்ட மும்மொழிக் கொள்கையால்தான், அந்தந்த
மாநில மொழிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அதேபோல இருமொழிக் கொள்கையைக் கைவிட்டால்தான் தமிழைப் பாதுகாப்பது
சாத்தியம்.
1967-இல் இருமொழித் திட்டம் தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட உடனேயே, முதல்வர்
அண்ணாவிடம் சென்ற சிலம்புச் செல்வர் மா.பொ.சி. இருமொழித் திட்டத்தில் தமிழ்
படிப்பது கட்டாயம் என்றில்லையே என்பதை அண்ணாவின் கவனத்திற்குக் கொண்டு
வந்தார்.
அண்ணாவும் அதை ஒப்புக் கொண்டு, தமது புதிய ஆட்சி இப்போதுதான்
தொடங்கியிருப்பதால், உரிய நேரத்தில் இதை மாற்றிக் கொள்ளலாம் என்று
சிலம்புச் செல்வருக்கு சமாதானம் கூறினார்.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் இருமொழித் திட்டம் ஹிந்தியைத்
தவிர்த்ததைப் போல, தமிழையும் வளராமல் தடுத்துவிட்டது என்று சுட்டிக்காட்டி
இதனைத் தி.மு.க. அரசு கைவிட வேண்டுமென்றார்.
இந்தப் பின்னணியில், ஹிந்தி என்ற மொழி பற்றிய, ஒரு மீள்பார்வையும் பொதுப்
புத்திக்கு அவசியப்படுகிறது.
ஹிந்தி தெரிந்திருந்தாலே போதும் இந்தியா முழுவதிலும் எல்லாருடனும்
தொடர்ந்து பேச முடிகிறது. ஆனால், ஆங்கிலத்தில் பாமர மக்களிடத்தில் பேச
முடியாது.
குறிப்பாக, தலைநகர் தில்லியில் பேசவே முடியாது.
ஹிந்தி பேசுவோர் உத்தரப்பிரதேசத்தில் 20 கோடி பேரும், மத்தியப்
பிரதேசத்தில் 8 கோடி பேரும், ஹரியானாவில் சுமார் 3 கோடி பேரும், தில்லியில்
2 கோடி பேரும் ஏறக்குறைய 40 கோடிப் பேருக்கு ஹிந்தி தாய்மொழியாகவே உள்ளது.
இத்துடன் உருது கலந்த ஹிந்தியை 18 கோடி முஸ்லிம்கள் பேசுகிறார்கள்.
சமஸ்கிருதம் கலந்த தேவநாகரி ஹிந்தி குஜராத், மகாராஷ்டிரம், பிகார்,
ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப் முதலிய மாநிலங்களில் உள்ள 50 கோடி
பேருக்குச் சுலபமாகும். அவர்களுடைய மொழிகளில் உள்ள சமஸ்கிருதக் கலப்புக்காக
யாரும் அதைச் சர்ச்சை செய்வதும் இல்லை.
மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால், 122 கோடி இந்தியர்களில் தென்
மாநிலத்தவர்கள் தவிர, ஏனையோருக்கு ஹிந்தி மொழியைக் கற்பதிலும்,
கையாள்வதிலும் சிரமமே இல்லை.
தென் மாநிலத்தவர்களிலும் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் ஆகிய
மாநிலங்களில் ஏறக்குறைய 22 கோடி மக்களின் மாணவர்கள், மும்மொழித்
திட்டத்தால் மத்திய ஆட்சி மொழியான ஹிந்தியை 1965 முதல் படித்துத்
தேர்ச்சிப் பெற்றுவிட்டனர்.
இவ்வகையில், வடமாநிலங்களில் 40 கோடி பேரும் ஹிந்தியைத் தழுவிய மாநிலங்களில்
50 கோடி பேரும் தென் மாநிலங்களில் 24 கோடி பேரும் சுமார் 114 கோடி பேர்
ஹிந்தி மொழியைப் பேசவும், எழுதவும் தெரிந்தவர்கள் என்பது ஒரு எதார்த்தமான
உண்மையாகும்.
இந்தியாவில் உள்ள 122 கோடி பேரில் 8 கோடி தமிழர்கள் மட்டுமே ஹிந்தியைக்
கற்க முடியாதவர்களாக - கற்க வாய்ப்புத் தரப்படாதவர்களாக - ஆகிவிட்டனர்.
ஹிந்தியைத் தவிர்த்ததற்கான சூழ்நிலை ஏற்படுவதற்கு தமிழ்நாடு மாநிலத்தில்
1965-இல் ஏற்பட்ட ஹிந்தி கிளர்ச்சியே காரணமாகும் என்று கூறுவது ஒரு
வரலாற்றுப் பிழையாகும்.
தி.மு.க.-வின் ஆட்சி 1967-இல் ஏற்பட உதவிய காரணங்களில், ஹிந்தித் திணிப்பை
மூன்றாவதாகத்தான் கூற
முடியும்.
தமிழ்நாட்டில் 1964-இல் தொடங்கி நீடித்த அரிசித் தட்டுப்பாடு மிகவும்
கடுமையானது.
அறிஞர் அண்ணாவே 1967 தேர்தலில் நமது மாநில மக்களிடத்தில்
"ரூபாய்க்கு 1 படி நிச்சயம் 3 படி லட்சியம்' என்று பேசி வாக்காளரைக்
கவர்ந்தார்.
இரண்டாவது முக்கியக் காரணம், 1965-இல் நடந்த மாணவர் ஹிந்தி எதிர்ப்பை
மறைமுகமாகத்தான் தி.மு.க. ஆதரித்தது. சுதந்திராக் கட்சி நிறுவனர் ராஜாஜியோ
ஹிந்தியை வெளிப்படையாகவே
எதிர்த்தார்.
1965-இல் ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகுதான்,
1967-இல் மாநில சட்டசபைத் தேர்தல் நடந்தது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு
எதிராக ஹிந்தியை எதிர்த்த அண்ணாவும் ராஜாஜியும் கூட்டணி சேர்ந்தனர்.
மூதறிஞர் ராஜாஜியின் முதல் எதிரியான கம்யூனிஸ்டும் (மார்க்சிஸ்ட்),
தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததை ராஜாஜி கண்டு கொள்ளவில்லை. காரணம்,
தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைய வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.
ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியும், பிரஜா சோசலிஸ்ட் கட்சியும் தி.மு.க.
கூட்டணியில் சேர்ந்தன.
ஆனால் 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனியொரு கட்சியாகத்தான் தேர்தலைச்
சந்தித்தது. இவ்வாறு 1967-இல் ஒரு மகாகூட்டணியை தி.மு.க. அமைத்ததால்தான்
137 இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்களே
கிடைத்தன.
மாநில ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா ராஜ்யசபை எம்.பி.-யாகத்தான் இருந்தார்.
ஆனாலும் தி.மு.க.-வின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக
எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.சி. ஆனார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான அரிசிப் பஞ்சம், 1967-இல் அமைக்கப்பட்ட
மகாகூட்டணி இரண்டையும் ஒதுக்கிவிட்டு, ஹிந்தி எதிர்ப்பால்தான் தி.மு.க.
மாநில ஆட்சியைக் கைப்பற்றியது என்பது பாதி அளவுக்கு உண்மை.
தமிழ்நாட்டைத் தவிர, எல்லா மாநிலங்களிலும் ஹிந்தியை மொழிப் பாடப் பிரிவில்
மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் மும்மொழிக் கொள்கை
கடைப்பிடிக்கப்பட வேண்டுமானால், இருமொழிக் கொள்கை இனி மேலும் நீடிக்காமல்
மாற்றப்பட வேண்டும்.
அப்போதுதான் கல்விக்கான தேசிய நீரோட்டத்தில் தமிழகமும் சங்கமிக்க முடியும்.
தமிழையும் கட்டாயமாக்கமுடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...