நம் நாட்டில் என்னதான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருந்தாலும்,இன்னும் சில கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது நீடித்து வருகிறது. மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் உடல்நலத்திற்கும், சுற்றுசுழலுக்கும் கேடுகள் ஏற்படுகின்றன. திறந்தவெளி கழிப்படத்தை தவிர்ப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரோகிணி கரலே என்ற பெண் தன் கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக மாற்றி சாதனை படைத்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் கர்ஜ்த் அருகேயுள்ள நந்கோன் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோகிணி கரலே (16). இவர் வசித்து வரும் கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. ஒரு வருடத்திற்கு முன்பு வரை அங்குள்ள ஒரு வீட்டில் கூடக் கழிப்பறை வசதி கிடையாது. இதனால், ரோகிணி அவளுடைய சிறுவயதிலிருந்தே, அந்த கிராமத்தில் கழிப்பறை உள்ள வீட்டை பார்த்தது கிடையாது. ரோகிணியும் கிராமத்தில் வசிக்கும் மக்களைப் போல் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தார். ஆனால், பருவமடைந்த பின், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவதில் தயக்கம் ஏற்பட்டது.
இது குறித்து ரோகிணி, ”நான் பருவமடைந்த பின், மனதளவிலும், உடலளவிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டது. கழிப்பறை இல்லாத காரணத்தால் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு சூரியன் மறையும் வரை காத்திருப்பேன். ஆனால்,மாதவிடாய் நாட்களில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அந்த சமயத்தில் திறந்தவெளி கழிப்பிடத்தைப் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருக்கும்.எனவே, இந்த நிலையை மாற்ற முடிவு செய்தேன். இதனால், என்னுடைய கிராம மக்களையும் சுகாதாரத்துடன் வாழ வைக்க முடியும் என நம்பினேன்.
என்னுடைய தாத்தா பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், அவர் மூலம் கிராமத்தில் கழிப்பறையை கட்டவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் திட்டமிட்டேன். எனவே, ஒரு பஞ்சாயத்துத் தலைவராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு என் தாத்தாவிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதைத்தொடர்ந்து, பொதுமக்களிடம் கழிப்பறை குறித்து பேசும்போது தான் கிராமத்திலுள்ள மற்ற இளம்பருவ பெண்களும் என்னைபோல் சிரமப்பட்டு வந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் எங்கள் ஊரில் கழிப்பறை வசதியை கொண்டு வந்தோம். அதன்மூலம், 15 குடும்பங்கள் கழிப்பறை வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனத்தின் உதவியால் கழிப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. தற்போது, 30% பேர் கழிப்பறை வசதியை பயன்படுத்துகின்றனர். இது எனக்கு பெருமிதத்தை அளிக்கின்றது” என தெரிவித்துள்ளார்
கர்நாடகா மாநிலம், முடிகேரி அருகே உள்ள குக்கொடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா,தனது தந்தையிடம் கழிப்பறை கட்டி தருமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் தந்தை மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுனிதா அந்த ஊர் கிராம பஞ்சாயத்து அலுவலக தலைமை நிர்வாக அதிகாரியை அணுகியுள்ளார். அதைத் தொடர்ந்து, கிராம பஞ்சாயத்து அலுவலக தலைமை நிர்வாக அதிகாரியும்,மற்ற அதிகாரியும் சேர்ந்து ஒரே நாளில் கழிப்பறை கட்டிக் கொடுத்து சுனிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வரும் இந்த கால கட்டத்தில், தனக்கென கழிவறை வேண்டுமென்பதே பெரும்பாலான பெண்களின் கனவாக உள்ளது. இந்நிலை பெண்களின் அவலநிலையை எடுத்துக் காட்டுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...