நமது முன்னோர்கள் கனவுப்படி, நாட்டை வளமாக்க இளைஞர்கள்
உறுதியேற்க வேண்டும் என தமிழக கவர்னர் பொறுப்புவகிக்கும் வித்யாசாகர் ராவ்
குடியரசு தினத்தையொட்டி ரேடியோ, தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் கூறியதாவது: 68வது குடியரசு தினம்
கொண்டாடும் இந்த நேரத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்
கொள்கிறேன். மும்பையில் இதேநாளில் நான் கொடியேற்ற வேண்டியிருந்ததால் சென்னை
மெரினா கடற்கரையில் நடந்த விழாவில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்த நாட்டில் பிறந்ததற்காக ஒவ்வொரு குடிமகனும் பெருமை அடைகிறோம். அத்துடன்
நாட்டின் முன்னேற்றத்தையும் நினைத்துப் பார்க்கிறோம். நமது அரசியலமைப்பு
சட்டம் உலகின் மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
தமிழக அரசை தலைசிறந்த சுதந்திர போராட்டத் தியாகிகளும், தமிழ்
அறிஞர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கினார்கள். அவர்களின் தியாகம்
இளைஞர்களுக்கு உந்துசக்தியாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் தரமான கல்வி
அளிக்கப்படுகிறது. 2015-16ஆம் ஆண்டில் இங்கு ஆரம்பக் கல்வியின் வளர்ச்சி
விகிதம் 99.85 சதவீதமாக அதிகரித்து இருப்பதை அறிந்து நான்
மகிழ்ச்சியடைகிறேன். இதேபோல், உயர் கல்வியில் நாட்டின் சராசரி வளர்ச்சி
23.6 சதவீதமாக உள்ள நிலையில் தமிழகத்தின் வளர்ச்சி 44.8 சதவீதமாக
அதிகரித்து இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன். மேலும் தமிழகத்தின்
வளர்ச்சி கண்டு மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தமிழகம் முதல்தர மாநிலமாகத்
திகழ்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தாயுள்ளத்துடன் ஏழைகள் மற்றும்
பொது மக்கள் நலனுக்காக பல சிறப்புத் திட்டங்களை அமல்படுத்தினார்.
அம்மா உணவகங்கள், பசுமை பண்ணை அங்காடிகள், குடிநீர்,
சிமெண்ட், மருந்தகங்கள் போன்ற அம்மா திட்டங்கள் ஏழைகள் மற்றும் நடுத்தர
குடும்பத்தினரின் விலைவாசி உயர்வு சுமையை குறைத்தது. அம்மா உணவகங்களின்
வெற்றியைத் தொடர்ந்து பல மாநிலங்கள் மட்டுமல்லாது சில உலக நாடுகளும் இங்கு
வந்து பார்வையிட்டு திட்டத்தை செயல்படுத்தும் முறையை அறிந்து தங்கள்
மாநிலங்களிலும் அமல்படுத்தி வருகின்றன.
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் செயல்படும் இ-சேவை மையங்கள்
பொதுமக்களின் வீடு தேடிச்சென்று சேவைகளை வழங்கி வருவது கண்டு மகிழ்ச்சி
அடைகிறேன்.’ இவ்வாறு கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...