கோவையில், துப்பறியும் பயிற்சித் தேர்வில் வெற்றிபெற்ற ஆறு மோப்ப நாய்களுக்கு நேற்று சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவையில் உள்ள காவல்துறை துப்பறியும் பயிற்சியகத்தில், கடந்த ஆறு மாதங்களாக வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்க, போதை மருந்துகளைக் கண்டுபிடிக்க, கொலையாளிகளின் தடயங்களைக் கண்டுபிடிக்க, இயற்கை பேரழிவுகளில்
சிக்கிக்கொண்டவர்களைக் கண்டுபிடிக்க மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர், அவற்றுக்கு துப்பறியும் பயிற்சித் தேர்வு வைக்கப்பட்டது. அதில் வெற்றிபெற்ற 6 நாய்களுக்கு துப்பறியும் பயிற்சி சான்றிதழ்களை காவல்துறை உயர் அதிகாரி நேற்று வழங்கினார். பின்னர், அவை காவல்துறை துப்பறியும் பயிற்சிப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
மத்திய அரசின் நாய்களுக்கான தேசிய பயிற்சி மையமான என்டிசிடி, மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியரில் 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பயிற்சி மையம் நாய்களுக்கான பல்வேறு பயிற்சிகளை அளித்துவருகிறது. மேலும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பவர்களையும் உருவாக்கி வருகிறது. இங்கு ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த நாய்க்கும் ஒரு பிரிவில் மட்டும்தான் பயிற்சியளிக்கப்படும்.
அதன்படி, லாபரேட்டர் ரிட்ரீவர், பிட்புல் போன்ற நாய்கள், ஐந்து நபர்களை நிற்கவைத்து, அவர்களில் ஒருவரிடம் வெடிகுண்டை மறைத்துவைத்திருந்தால், அந்த நாய் சில நொடிகள் மோப்பம் பிடிக்கும். பின், வெடிகுண்டு வைத்திருப்பவரின் அருகில் சென்று குரைக்கத் தொடங்கும். பீகிள், ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு போன்ற நாய்களுக்கு விமான நிலையங்களில் போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்க பயிற்சியளிக்கப்படுகின்றன. கூலி, ஜெர்மன் ஷெப்பர்டு, ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு நாய்கள் திருடர்களைக் கண்டுபிடிக்கவும், காணாமல்போனவர்களைத் தேடவும் பயன்படுத்தப்படுகின்றன. பிளட் ஹவுண்டு, பீகிள், கோல்டன் ரீட்ரைவர் நாய்கள், தண்ணீருக்கடியில் உள்ள பிணங்களை நீரில் மூழ்கி கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நாய்கள் குட்டிகளாக அதாவது, 6 முதல் 9 மாதங்களாக இருக்கும்போது இவற்றுக்கான பயிற்சி தொடங்கப்படும். பின்னர், 3 முதல் 6 மாதங்களில் பணிக்குத் தகுந்தவாறு பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நாய்களுக்கு, 10 ஆண்டுகள் வரை காவல்துறை துப்பறியும் பயிற்சிப் பிரிவில் சேர்த்துக் கொள்ளப்படும்.
நாய்க்கு பயிற்சியாளராக விரும்புபவர்கள், 15 நாட்கள் நாயுடன் பழகி மூன்று மாதங்களில் பயிற்சியை முடிக்க வேண்டும். நாய் பயிற்சியாளருக்கு நாயை பயிற்றுவிக்கும் பயிற்சியுடன், எழுத்துத் தேர்வும் உள்ளது. இரண்டிலும் வெற்றிபெற்றால், நாய் பயிற்சியாளர் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் எல்லை பாதுகாப்புப் படை, காவல் துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...