கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு- பொது செயல்திறன்
தேர்வுகளின் (சிபிடி) முடிவுகளை இந்தியன் சார்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம்
(ஐசிஏஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
இதில், லக்னெள மாணவி எடி அகர்வால்
அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.பள்ளிப் படிப்பை முடித்தோர் சிபிடி தேர்வு, இடைநிலைத் தேர்வுகளான (ஐபிசி) குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் ஆகியவற்றில் அடுத்தடுத்து தேர்ச்சி பெற்று சி.ஏ. இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பட்டப் படிப்பை முடித்தோர் நேரடியாக இடைநிலைத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று, சி.ஏ. இறுதித் தேர்வைச் சந்திக்கலாம்.
இறுதித் தேர்வும், சிபிடி தேர்வும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இந்த நிலையில், 2016 நவம்பரில் நடத்தப்பட்ட சி.ஏ. இறுதித் தேர்வு முடிவையும், டிசம்பரில் நடத்தப்பட்ட சிபிடி தேர்வு முடிவையும் ஐசிஏஐ வெளியிட்டது.
நாடு முழுவதிலுமிருந்து சி.ஏ. இறுதித் தேர்வை எழுதிய 36,768 பேரில் 4,256 பேரும், சிபிடி தேர்வு எழுதிய 70,321 பேரில் 32,658 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ. இறுதித் தேர்வில் 800-க்கு 599 மதிப்பெண்களை லக்னெளவைச் சேர்ந்த மாணவி எடி அகர்வால் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பிவாண்டியைச் சேர்ந்த பியூஷ் ரமேஷ் லோஹியா 574 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், ஆமதாபாத்தைச் சேர்ந்த ஜோதி முகேஷ்பாய் மகேஸ்வரி 566 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
தமிழகத்துக்கு சிறப்பிடம் இல்லை: 2015 நவம்பரில் சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ 595 மதிப்பெண்களுடன், 2016 மே மாதத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் எஸ். ஸ்ரீராம் 613 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடங்களைப் பெற்றிருந்தனர். ஆனால், இந்த முறை தமிழக மாணவர்கள் பின்தங்கிவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...