அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள பழைய
ஆண்ட்ராய்டு அலைபேசியின் மூலம் அமெரிக்க பாதுகாப்பு குறித்த ரகசியத்
தகவல்கள் கசியக்கூடும் என பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
அமெரிக்காவின் 45ஆவது அதிபராக டொனால்டு டிரம்ப், கடந்த 20ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவர் இன்னும் சமூக வலைதளமான ட்விட்டரில் தனது கருத்துகளை பதிவு செய்வதற்கு அவரிடம் இருக்கக்கூடிய பழைய, பாதுகாப்பு குறைவான ஆண்ட்ராய்டு அலைபேசியைத்தான் பயன்படுத்தி வருகிறாராம்.
இதுகுறித்த தகவல் புதன்கிழமை அன்று அமெரிக்காவின் முக்கிய நாளிதழான நியூயார்க் டைம்ஸில் வெளியானது. டிரம்பின் இந்தச் செயல்மூலம் அவர் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் எளிதாக வெளியாகும் அபாயம் இருப்பதுடன், அரசாங்கத் தகவல்கள் வெளியானால் தேசப் பாதுகாப்பு தொடர்பான சிக்கல் எழலாம் எனவும் நியூயார்க் டைம்ஸில் எச்சரித்துள்ளனர்.
அவர் உடனடியாக, தன்னுடைய பழைய மாடல் அலைபேசிக்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பான அலைபேசியை பயன்படுத்த வேண்டும் என அவரது கட்சியினரும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
இந்த விவகாரத்தில் அவர், தனக்கு முன் அதிபராகப் பணியாற்றிய ஒபாமா போன்று மறு வடிவமைப்பு செய்யப்பட்ட சிறப்பு அலைபேசியை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒபாமா முதலில் மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பிளாக்பெர்ரி அலைபேசியையும், பின்னர் ஆப்பிள் போனையும் பாதுகாப்பு கருதி பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...