மாணவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக கல்வித்திட்டம் அமைய வேண்டும் என பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல்
கல்லூரியின் 21-ஆவது ஆண்டு கல்லூரி தின விழாவில் பங்கேற்று அவர் மேலும்
பேசியது:
நம் நாட்டில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், பெண்களுக்கு உரிய மரியாதை
அளிக்கப்படுகிறது. தில்லியில் பாலியல் துன்புறுத்தலால் பெண் ஒருவர்
கொல்லப்பட்டபோது, நமது நாட்டை விமர்சித்தும், இங்கு பெண்களுக்கு
பாதுகாப்பில்லை எனவும் பத்திரிகைகள் தெரிவித்தன. ஆனால், லண்டனிலிருந்து
வெளிவரும் கார்டியன் பத்திரிகையில், இந்தியாவில் பல்வேறு பிரச்னைகள்
இருப்பினும், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதியால் நாடே ஸ்தம்பித்துவிட்டது.
இதிலிருந்து இந்தியாவில் பெண்ணுக்குள்ள மரியாதையை அறிய முடியும் என
எழுதப்பட்டிருந்தது.
நமது நாட்டின் பண்பாடு, கலாசாரம், பெற்றோருக்கு அளிக்கப்படும் மரியாதையை
எடுத்துக் கூற யாரும் இல்லை. பெற்றோரை போற்றுதல், குடும்பமாக வாழ்தல்
என்பது நமது வாழ்க்கையின் ஒரு பங்கு. ஆனால் இது வெளிநாட்டில் இல்லை.
குடும்பங்களை சட்டத்தின் மூலமாக உருவாக்க முடியாது. பிரிக்க மட்டுமே
இயலும். சேர்ப்பதற்கு கலாசாரம், பாரம்பரியத்தால் மட்டுமே முடியும்.
நமது நாட்டில் படிக்காதவர்கள் வேலை அளிப்பவர்களாகவும், படித்தவர்கள்
அவர்களிடம் வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர். இதற்கு அவர்களின்
தன்னம்பிக்கையே காரணம். நமது நாட்டில் கல்விக்கும், தொழில்வளர்ச்சிக்கும்
சம்பந்தமில்லை.
மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லையென்றால் தொழில்வளர்ச்சி ஏற்படாது.
தன்னம்பிக்கையே மனிதனை உயர்த்தும். மாணவர்களிடம் தன்னம்பிக்கையை
ஏற்படுத்தும்விதமாக கல்வித் திட்டம் அமைய வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு தலைமை வகித்து, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி பேசியது:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின்போது, வங்கி அதிகாரிகள் பல்வேறு
முறைகேடுகளில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. அவர்களுக்கு நாட்டுப்பற்று
இருக்கிறதா, நேர்மை உள்ளதா என்ற சந்தேகம் வருகிறது. இது மொத்த
சமுதாயத்தையும் கெடுக்கும் செயலாகும். இன்றைய மாணவர்கள் சிறந்த குடிமகனாக,
சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றார்.
முன்னதாக, விழாவில் கல்லூரியின் செயலர் அம்மங்கி பாலாஜி வரவேற்றார்.
முதல்வர் ஜெ.ராதிகா ஆண்டறிக்கை வாசித்தார். ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின்
தலைவர் ராஜகோபால், மாணவ, மாணவிகள், அனைத்துத் துறை பேராசிரியர்கள்
பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...