குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம்
தேசிய கொடி ஏற்றுகிறார்.நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆண்டுதோறும்
ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்களும், ஜனவரி 26-ஆம்
தேதி குடியரசு தினத்தன்று கவர்னர்களும் கொடியேற்றும் நடைமுறை இருந்து
வருகிறது.தமிழகத்தில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சரும், கடற்கரை காமராஜர் சாலையில் காந்திசிலை அருகில் கவர்னரும் கொடியேற்றுவார்கள். இந்த ஆண்டு வருகிற 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்ற மாட்டார் என்றும் அவருக்கு பதில் முதலமைச்சர் கொடியேற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு தனியாக இன்னும் கவர்னர் நியமிக்கப்படவில்லை. மராட்டிய கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். அவர் வருகிற 26-ஆம் தேதி மராட்டிய கவர்னர் என்ற முறையில் மும்பையில் கொடியேற்ற இருப்பதால் சென்னையில் அன்றைய தினம் அவர் கொடியேற்றவில்லை.
எனவே வருகிற 26-ஆம் தேதி சென்னையில் கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கவர்னருக்கு பதில் முதலமைச்சர் கொடியேற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
கடந்த 1974-ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தில் கவர்னர்கள் கொடியேற்றும் முறை கொண்டு வரப்பட்டது. அது முதல் கவர்னர்களே சென்னையில் கொடியேற்றி வருகிறார்கள். தற்போது தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்கப்படாததால் முதல் முறையாக கவர்னருக்கு பதில், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடியரசு தினத்தன்று கொடியேற்றுகிறார். தமிழகத்தில் குடியரசு தினத்தன்று இதுவரை எந்த முதலமைச்சரும் கொடியேற்றியது கிடையாது. முதல் முறையாக அந்த வாய்ப்பு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...